இருளர்களுக்கான இலவச வீடுகள் கட்டுவதில்...இழுபறி:பணி துவங்கி ஓராண்டாகியும் முடியவில்லை
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 8 ஒன்றியங்களில் இருளர் இனமக்களுக்கு 330 வீடுகள் கட்ட கடந்த ஆண்டில் 19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணி துவங்கி ஓராண்டாகியும் வெறும் 42 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகள் கட்டுவதில் இழுபறி தொடர்கிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.மாவட்டத்தில், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில், பயனாளிகளுக்கு வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. கிராமங்களில், குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் கணக்கு எடுக்கும் பணியில், ஊராட்சி செயலர், சுகாதார குழுனவினர், கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டனர்.இதில், ஏழு ஊராட்சி ஒன்றி ஊராட்சிகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருளர்கள், குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர் என்பது கண்டறியப்பட்டது. அதன்பின், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். இதைத்தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீடுகள் கணக்கெடுப்பை சாரிபார்த்து, ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனரிடம் அறிக்கை சமர்பித்தனர்.மாவட்டத்தில், 330 இருளர் இன மக்கள் தேர்வு செய்யப்பட்டனர். பின், மத்திய அரசின், பி.எம். ஜன்மன் திட்டத்தில், பழங்குடி இனத்தைச்சார்ந்த இருளர் இன மக்கள் 330 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, ஒரு வீடு கட்ட 300 சதுர அடியில், தலா 5 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இத்திட்டத்தில், 2023-24 ம் ஆண்டில், எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், 304 வீடுகள் கட்டவும், 2024-25 ம் ஆண்டில், 26 வீடுகள் என மொத்தம் 330 வீடுகள் கட்ட 18.81 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திட்ட பயணிகளுக்கு, வீடுகள் கட்ட நிர்வாக அனுமதி வழங்கி, கலெக்டர் உத்தரவிட்டார். ஓராண்டுக்கு மேலாக பணிகள் துவங்கி, நடைபெற்று வருகிறது.இதில், 2023- 24 ம் ஆண்டு திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 27 வீடுகள் ஒதுக்கியதில், 21 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 47 வீடுகளில் ஒரு வீடும், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில், 39 வீடுகள் ஒதுக்கியும், ஒரு வீடும், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 100 வீடுகளில், 10 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில், 39 வீடுகள் ஒதுக்கிடு செய்தும், பணிகள் துவக்கப்படாமல் உள்ளன. மற்ற ஊராட்சி ஒன்றியங்களில், வீடுகள் கட்டும் பணி மந்தமாக உள்ளது. அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் அனந்தமங்கலம் ஊராட்சியில், வீடுகள் கட்டி, பணி முழுமைபெறதாத வீடுகளில், இருளர்கள் வசித்து வருகின்றனர்.அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில், கடம்பூரில் 10 வீடுகள், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில், இரும்பேட்டில் ஒரு வீடு, சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் புத்திரன்கோட்டையில் 4 வீடுகள், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியம் நரப்பாக்கம் ஊராட்சியில், 7 வீடுகள் என, 26 வீடுகள் ஒதுக்கீடு செய்து, பணி ஆணை வழங்கப்பட்டது. ஆனால், பணிகள் துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இருளர்களுக்கு வீடுகள் கட்டும் பணியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனிகவனம் செலுத்தி, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, கலெக்டர் அருண்ராஜ், உத்தரவிட்டார். இருளர் மக்கள் நலன்கருதி, கோடைகாலத்திற்குள் வீடு கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாவட்டத்தில் இருளர் இன மக்களுக்கு வீடு கட்டும் பணி துவங்கி நடைபெற்றுவருகிறது. 2023 ----24 ல் துவக்கப்பட்ட பணியில், 42 வீடுகள் பணி முடிக்கப்பட்டது. 262 வீடுகளின் கட்டுமான பணிகள் நடை பெற்று வருகிறது. பணிகளை விரைந்து முடிக்க, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வீடுகள் ஒதுக்கீடு
2023-24ம் ஆண்டு ஒன்றியம் வீடுகள் பணி முடிந்ததுஅச்சிறுப்பாக்கம் 100 10மதுராந்தகம் 47 1சித்தாமூர் 39 2லத்துார் 25 4திருக்கழுக்குன்றம் 39 -0திருப்போரூர் 27 21காட்டாங்கொளத்துார் 27 4.மொத்தம் 304 42