உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மகளிர் பள்ளிக்கு ஒதுக்கிய இடத்தை கல்வித்துறைக்கு மாற்றுவதில் இழுபறி

மகளிர் பள்ளிக்கு ஒதுக்கிய இடத்தை கல்வித்துறைக்கு மாற்றுவதில் இழுபறி

திருப்போரூர்:கேளம்பாக்கத்தில், அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை, பள்ளிக்கல்வித் துறை பெயருக்கு மாற்றாமல் இருப்பதால், சொந்த கட்டடம் வசதி இல்லாமல் மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர். திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கத்தில் அரசு தொடக்கப்பள்ளி, மகளிர் உயர்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த மூன்று பள்ளிகளில், 2,000க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர். இதில், அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளி தற்போது, இருபாலர் படிக்கும் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வருகிறது. மகளிர் பள்ளிக்கு சொந்த இடம், வகுப்பறை கட்டடம் ஏற்படுத்த வேண்டுமென பெற்றோர்கள், மாணவியர் தரப்பில் கோரிக்கை எழுந்தது. எனவே, பள்ளி மாணவியர் நலன் கருதி, 2012ம் ஆண்டு, கேளம்பாக்கம் ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, கேளம்பாக்கத்தில் புல எண்: 11/1 மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில், 2 ஏக்கர் இடம், பள்ளி கட்டடம் கட்ட ஒதுக்கப்பட்டது. அங்கு, 2015 -16ம் நிதியாண்டில், சிறப்பு கிராம தன்னிறைவுத் திட்டத்தின் கீழ், 9 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர், 3 லட்சம் ரூபாய் மதிப்பில் பிரமாண்ட முகப்பு வளைவும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மகளிர் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இந்த நிலத்தை, பள்ளி கல்வித்துறை பெயருக்கு நில மாற்றம் செய்யாததால், அடுத்தகட்ட பணியாக வகுப்பறை போன்ற கட்டடங்கள் கட்டும் பணியும் துவக்கப்படாமல் உள்ளது. இதனால், இருபாலர் படிக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மகளிர் உயர்நிலைப்பள்ளி தற்போது வரை செயல்பட்டு வருகிறது. இங்கு இடப்பற்றாக்குறை உள்ளதால், மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகம், பொதுமக்கள் தரப்பில் இருந்து, தொடர்ந்து மனுக்கள் அளித்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், இதுவரை நில மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், சமீபத்தில் கேளம்பாக்கம் ஊராட்சி தலைவர் ராணி, துணை தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் சென்னை, எழிலகத்தில் நில நிர்வாக ஆணையரை சந்தித்தனர். அப்போது, கேளம்பாக்கம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு கட்டடம் அமைக்க, பள்ளி கல்வித்துறைக்கு நிலத்தை வகை மாற்றம் செய்து உத்தரவிடும்படி மனு அளித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட நில நிர்வாக ஆணையர், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். மாணவியர் நலன்கருதி, விரைவில் பள்ளிக்கல்வித் துறை பெயருக்கு நில மாற்றம் செய்து தர வேண்டுமென,தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை