கூடலுார் மகளிர் சுகாதார வளாகம் பாழ் இடித்து அப்புறப்படுத்த வலியுறுத்தல்
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்குட்பட்டு, கூடலுார் ஊராட்சி உள்ளது. இப்பகுதியில், 400க்கும் மேற்பட்ட குடும்த்தினர் வசிக்கின்றனர்.அம்பேத்கர் நகர் பகுதி அங்கன்வாடி மையம் அருகே, மகளிர் பயன்பாட்டிற்காக, 12 ஆண்டுகளுக்கு முன், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.இந்த வளாகம், கழிப்பறை, குளியலறை, மின் மோட்டாருடன் கூடிய நீரேற்றும் அறை, தண்ணீர் தொட்டி மற்றும் துணி துவைக்கும் கல் ஆகியவற்றுடன் கட்டப்பட்டது.தற்போது, பயன்பாடின்றி, இடிந்து விழும் நிலையில் சீரழிந்துள்ளது. இதனால், பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தங்குமிடமாக உள்ளது. அதுமட்டுமின்றி, சுகாதார வளாகத்தின் செப்டிக் டேங்க் மூடப்படாமல் திறந்து கிடக்கிறது.அங்கன்வாடி மையம் அருகே உள்ளதால், அசம்பாவிதம் ஏற்படும் முன், மகளிர் சுகாதார வளாகத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.இது குறித்து, பலமுறை அங்கன்வாடி மையக் குழந்தைகளின் பெற்றோர், ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தும், ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக, பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.எனவே, பாழடைந்த மகளிர் சுகாதார வளாக கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.