திருவிடந்தை கோவில் திருமண மண்டபம் பயன்பாட்டிற்கு திறக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
மாமல்லபுரம்: திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில் நிர்வாகம், 7 கோடி ரூபாய் மதிப்பில் கட்டியுள்ள திருமண மண்டபத்தை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில், பிரசித்தி பெற்ற நித்ய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது. வைணவ சமய 108 திவ்யதேசங்களில், 62வதாக இக்கோவில் விளங்குகிறது. பாரம்பரிய தொன்மை சார்ந்து, இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. பரிகார கோவில் திருமணத் தடை, ராகு -- கேது தோஷம் ஆகிய பரிகார கோவிலாக சிறப்பு பெற்றது. இங்கு திருமணம் செய்ய, கோவில் நிர்வாகம் சார்பில் திருமண மண்டபம் அமைக்க வேண்டுமென, பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதை பரிசீலித்த கோவில் நிர்வாகம், இப்பகுதி கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி, கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், 4.30 கோடி ரூபாய் மதிப்பில் திருமண மண்டபம் அமைக்க கருதி, அரசிடம் பரிந்துரைத்தது. இதுதொடர்பாக, 2020ல் சட்டசபையில், 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டு, 2021ல் நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், 2022 ஆக., 29ம் தேதி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக அடிக்கல் நாட்டி, இங்கு பூமி பூஜையுடன் திருமண மண்டபம் கட்டுமான பணிகள் துவக்கப்பட்டன. ரூ.4.30 கோடி கடந்த மூன்றாண்டுகளாக கட்டுமானப் பணிகள் நடந்து, தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. திருமண மண்டப கட்டடம் கட்ட மட்டுமே, 4.30 கோடி ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டது. தற்போது இந்த மண்டபத்தில் குளிர்சாதன வசதி, உட்புறம் மற்றும் கூரை அலங்காரம், வளாகத்தில் கான்கிரீட் கல் தரைதளம், சுற்றுச்சுவர் ஆகிய வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. தற்போது, திட்ட மொத்த செலவு, 7 கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதாக, நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பே பணிகள் முடிக்கப்பட்டு, முதல்வர் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சர்ச்சை கோவில் நிதியில் திருமண மண்டபம் உள்ளிட்டவை கட்டுவது தொடர்பாக, உயர் நீதிமன்ற வழக்கு சர்ச்சை ஏற்பட்ட விவகாரத்தால், திருமண மண்டபம் திறப்பு விழா தாமதமாவதாக கூறப்படுகிறது . இந்நிலையில், இந்த திருமண மண்டபத்தை திறந்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். வழக்கால் சிக்கல் இதுகுறித்து, கோவில் நிர்வாகத் தினர் கூறியதாவது: திருமண மண்டப கட்டுமானப் பணிகள், முழுதுமாக முடிக்கப்பட்டுள்ளன. இதை திறக்க இருந்த நிலையில், நீதிமன்ற வழக்கால் சிக்கல் ஏற்பட்டது. மண்டபத்தை திறப்பது குறித்து, உயரதிகாரிகள் தான் தீர்மானிக்க முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர். மண்டபத்திலுள்ள வசதிகள் திருமண மண்டப வளாகம் 1.50 ஏக்கர் பரப்பில் அமைந்து, திருமண மண்டபம் தரை, மேல் தளங்களுடன் உள்ளது. திருமணம் நடக்கும் அரங்கம், மணமக்கள் அறைகளுடன், 350 பேர் அமரும் வகையில், 6,696 சதுர அடி பரப்பில், மேல்தளத்தில் உள்ளது. மணமக்கள் குடும்பத்தினர் தங்கும் எட்டு அறைகள், ஆண், பெண் தங்கும் தலா இரண்டு அறைகள், 4,044 சதுர அடி பரப்பில், தரைதளத்தில் உள்ளன. உச்சதளம், மாடிப்படி கூண்டு, மின்துாக்கி வசதியும் உள்ளது. 75 கார், 150 இருசக்கர வாகனங்கள் நிறுத்தலாம். குளியல், கழிப்பறைகள் தனியே உள்ளன.