உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வயலுாரில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு அனுமதியை ரத்து செய்யக்கோரி தர்ணா

வயலுாரில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு அனுமதியை ரத்து செய்யக்கோரி தர்ணா

செய்யூர்:சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெற்குணம் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், ஏரி பாசனம் மற்றும் கிணற்று பாசனத்தின் வாயிலாக, மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், நெற்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட வயலுார் கிராமத்தில், தனியார் நிறுவனம் சார்பில் கல் குவாரி அமைப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிமவளத் துறையினரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.கல் குவாரி அமைந்தால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் என்பதால், கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, வயலுார், நெற்குணம், சிறுவிளாம்பாக்கம், புளியனி, துாதுவிளம்பட்டு, கடப்பேரி, புத்தமங்கலம் உள்ளிட்ட கிராம மக்கள், கடந்த 19ம் தேதி நெற்குணம் பேருந்து நிலையம், முருகன் கோவில் அருகே, ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், கிராம மக்களுக்கு தெரியப்படுத்தாமல், கல் குவாரி அமைக்க ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து, ஊராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, நேற்று 100க்கும் மேற்பட்டோர், சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த சித்தாமூர் பி.டி.ஓ., சீனுவாசன், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தி, கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து தீர்வு காணப்படும் என, உறுதி அளித்தார்.அதன்படி, போராட்டத்தை கைவிட்ட கிராம மக்கள், அங்கிருந்து செய்யூர் வட்டாட்சியர் அலுவலகம் சென்று, தனியார் நிறுவனம் கல் குவாரி அமைக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என, வட்டாட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, செய்யூர் வட்டாட்சியர் சரவணன், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, கல்குவாரி அனுமதியை ரத்து செய்வது குறித்து, துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேச்சு நடத்தப்படும் உறுதி அளித்ததன் பேரில், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை