பறிமுதல் வாகனங்களால் இடையூறு: மதுராந்தகத்தில் ஏலம் விட கோரிக்கை
மதுராந்தகம் : மதுராந்தகம் பழைய போலீஸ் குடியிருப்பு பகுதி ஜி.எஸ்.டி., சாலையோரம் அமைந்துள்ளது.இந்த குடியிருப்பு அருகே ஜி.எஸ்.டி.,சாலையோரம் உள்ள காலி இடத்தில் கிளியாறு மற்றும் ஓடைகளில் மணல் திருட்டில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள், குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட டாடா ஏஸ் கார் போன்ற வாகனங்களை போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர். பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இந்த வாகனங்கள் துருப்பிடித்து மட்கி வீணாகி வருகின்றன. மேலும் அப்பகுதி பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தங்குமிடமாக உள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் மதுபிரியர்கள் கூடாரமாகவும், சிறுநீர் கழிக்கும் இடமாகவும் பயன்படுத்தி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்களை பொது ஏலம் விட காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.