உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் இடையூறான 4 மதுக்கடையை அகற்றுவதில்... மெத்தனம் : முதல்வரிடம் மனு அளித்தும் நடவடிக்கையின்றி அதிருப்தி

செங்கையில் இடையூறான 4 மதுக்கடையை அகற்றுவதில்... மெத்தனம் : முதல்வரிடம் மனு அளித்தும் நடவடிக்கையின்றி அதிருப்தி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலை, அண்ணா நகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டுமென, மாவட்ட நிர்வாகத்திடம் நகரவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலினிடம் கடந்த மாதம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பதால், கடும் அதிருப்தியில் உள்ளனர். செங்கல்பட்டு நகராட்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், முன்மை மாவட்ட நீதிமன்றம், அரசு மருத்துவமனை, அரசு சட்டக் கல்லுாரி, அரசு கலைக்கல்லுாரி உள்ளிட்டவை உள்ளன. வங்கிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களும் ஏராளமாக உள்ளன. இதுமட்டுமின்றி, அரசு மேல்நிலைப் பள்ளிகள் உட்பட, 15க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், செங்கல்பட்டு நகரைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த, 10,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். தனியார் கல்லுாரி இதுமட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளைச் சேர்ந்த, 10,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலை வழியாக தினமும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். இந்த சாலையில், புதிய பேருந்து நிலையம் அருகில் இரண்டு டாஸ்மாக் கடைகள், அண்ணா நகர் பகுதியில் ஒன்று, பழைய பேருந்து நிலையம், ரயில்வே மேம்பாலம் பகுதியில் தலா ஒன்று என, மொத்தம் நான்கு டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. மேற்கண்ட இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வரும் மது பிரியர்கள், தங்களின் வாகனங்களை சாலையில் இடையூறாக நிறுத்தி விட்டு வருகின்றனர். இதனால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மதுபோதையில் வாகனங்களில் செல்லும் மது பிரியர்களால், மற்றவர்களும் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதுமட்டுமின்றி, போதையில் செல்லும் மதுபிரியர்கள், அவ்வழியாகச் செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடக்கிறது. குறிப்பாக, அண்ணா நகர் நுழைவாயில் பகுதியில், டாஸ்மாக் கடை உள்ளது. இவ்வழியாக பள்ளி, கல்லுாரிகளுக்குச் செல்லும் மாணவியர், வேலைக்குச் செல்லும் பெண்கள் மாலையில் வீடு திரும்பும் போது, இந்த டாஸ்மாக் கடை வழியாக செல்ல வேண்டியுள்ளது. இடமாற்றம் அப்போது, மது பிரியர்கள் இவர்களை கிண்டல் செய்து, பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மதுபோதையில் தள்ளாடும் மதுபிரியர்கள், தங்களுக்குள் அடிக்கடி பொது இடத்தில் மோதிக்கொள்கின்றனர். இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. குடித்துவிட்டு போதை தலைக்கேறியதும், காலி மதுபாட்டில்களை சாலைகளில் போட்டு உடைக்கின்றனர். அப்போது, அவ்வழியாகச் செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்களின் கால்களில் பாட்டில் குத்தி காயமடைகின்றனர். இதுபோன்று, பல்வேறு தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர். தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் அருகில் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கினால் அகற்ற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவிற்குப் பின், சில கடைகள் மட்டும் அகற்றப்பட்டன. ஆனால், செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலை அருகில் உள்ள, மேற்கண்ட நான்கு டாஸ்மாக் கடைகள் மட்டும், இன்னும் அகற்றப்படவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர். இந்நிலையில், செங்கல்பட்டில் பெரும் இடையூறாக உள்ள மேற்கண்ட நான்கு டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திடம், சமூக ஆர்வலர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மேலும், செங்கல்பட்டில் அரசு விழாவில் பங்கேற்க வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினிடம், கடந்த மார்ச் 11ம் தேதி, இதுகுறித்த கோரிக்கை மனுவை, சமூக ஆர்வலர்கள் அளித்தனர். ஆனால், இம்மனு மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மதுக்கடைகளை மாற்ற நடவடிக்கை எடுக்காமல், டாஸ்மாக் அதிகாரிகளும் மெத்தனமாக உள்ளனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி, இடையூறாக இயங்கும் இந்த நான்கு டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும். அல்லது வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, செங்கல்பட்டு நகரவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர். செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், ஜி.எஸ்.டி., சாலைக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் இயங்குவதால், சாலையில் நடந்து செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்கிறது. போக்கு வரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. இதனால், டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டியது அவசியம். - ஜெ.ராஜேஷ்குமார், சமூக ஆர்வலர், செங்கல்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை