விவசாயிகளுக்கு தொழில் வாய்ப்பு மாவட்ட நிர்வாகம் அழைப்பு
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், தேசிய வேளாண் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் தொழில் துவங்க, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், பவுஞ்சூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், சிட்லப்பாக்கம் ஆகிய வட்டாரங்களில், விவசாய தொழில் பிரதானமாக உள்ளது. இந்த வட்டாரங்களில் வேளாண் தொழிலுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் தொழில் முனைவோருக்கு கடன் வழங்க, 69 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய வேளாண் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், ஒரு தொழில் முனைவோருக்கு அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் கடன், 3 சதவீத வட்டி மானியத்துடன் வழங்கப்பட உள்ளது. எவ்வித பிணையும் இல்லாமல், அரசின் முழு உத்தரவாதத்துடன் வழங்கப்படும் இந்த கடன் தொகையை, 7 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தலாம். விவசாயிகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள், வேளாண் தொழில் முனைவோர், ஏற்றுமதியாளர்கள், வர்த்தகர்கள், உணவு பதப்படுத்துவோர் இத்திட்டத்தின் கீழ் கடன் பெற்று, தொழில் துவங்கலாம். திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு, அந்தந்த வட்டார உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி, தேவையான விபரங்களை கேட்டுப் பெறலாம். ஆர்வம் உள்ள தகுதியான நபர்கள் www.agriinrra.dac.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.