தீபாவளி பண்டிகை :கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் 4,250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கூடுவாஞ்சேரி:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தோர், குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வடத்துவங்கியுள்ளனர்.அதற்காக அங்கு, கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அது குறித்து ஆய்வு செய்ய, அமைச்சர்கள் சேகர்பாபு, சிவசங்கர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், நேற்று காலை 7:45 மணிக்கு கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வந்தனர்.அப்போது, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ வசதிகள், குடிநீர், ஏ.டி.எம்., மையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தனர்.தொடர்ந்து, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:தீபாவளி பண்டிகையை கொண்டாட, 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சொந்த ஊருக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.அதற்கு சிறப்பு ஏற்பாடாக, 4,250 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. மேலும், பயணிகள் வரத்து அதிகரிக்கும்பட்சத்தில், இன்னும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், வண்டலுார் அண்ணா உயிரியல் பூங்கா, கரசங்கால் மற்றும் மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மறைமலை நகர், கரசங்கால், வண்டலுார் உள்ளிட்ட பகுதிகளில், ஒலிபெருக்கி வாயிலாக, பயணியர் செல்லக்கூடிய ஊர்களுக்கான பேருந்து விபரம் அறிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தனியார் பேருந்துகளும், அரசின் கட்டுப்பாட்டில் தான் செயல்படும். ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக, பயணியரிடம் இருந்து புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.பயணியரின் நலனை கருத்தில் கொண்டு, தாம்பரம் மற்றும் கோயம்பேட்டில் இருந்து, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு பத்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதேபோல், 10 கி.மீ., தொலைவுக்கு, ஒரு பகுதியில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
வழக்கமாக இயக்கப்படும் அரசு பேருந்துகள் 3,408
சிறப்பு பேருந்துகள் 4,250தனியார் ஆம்னி பேருந்துகள் 2,000------வழக்கமாக இயங்கும் இரண்டு முன்பதிவு மையங்கள் தவிர, கூடுதலாக மூன்று முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.பயணியரின் வசதிக்காக, மூன்று உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை, 78457 00557, 78457 27920, 78457 40924