உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகம் மருத்துவமனையில் குழாய் உடைந்ததால் வீணாகும் குடிநீர்

மதுராந்தகம் மருத்துவமனையில் குழாய் உடைந்ததால் வீணாகும் குடிநீர்

மதுராந்தகம் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் அருகே குடிநீர் குழாய் உடைந்து உள்ளதால், குடிநீர் வீணாகி வருகிறது.மதுராந்தகம் பகுதியில் அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.சித்தாமூர், சூணாம்பேடு, அச்சிறுபாக்கம், மதுராந்தகம், ராமாபுரம், வேடந்தாங்கல் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் என 1,300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மருத்துவமனை அவசரசிகிச்சை பிரிவு கட்டடம் அருகே, பல மாதங்களுக்கு முன் குடிநீர் குழாய் உடைந்துள்ளது.சைக்கிள் டியூப் கொண்டு, நீர்க்கசிவு ஏற்படுவதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர்.குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு காரணமாக, நீர் வெளியேறி, அப்பகுதியில் பாசிபடர்ந்து உள்ளது.எனவே, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மதுராந்தகம் நகராட்சி அதிகாரிகள், உடனடியாக குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க வேண்டுமென, நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.

இயந்திரம் பழுது

செய்யூர் பஜார் வீதியில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. தண்ணீர்பந்தல், சித்தாற்காடு, புத்துார், அம்மனுார், கீழச்சேரி என 30க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான அரசு மருத்துவமனையாக உள்ளது.புறநோயாளிகள், மகப்பேறு மற்றும் அவசர சிகிச்சைக்கு என நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் தினசரி வந்து செல்கின்றனர்.மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 2019ம் ஆண்டு செய்யூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து எட்டு லட்சத்தில் ஆர்.ஓ., குடிநீர் சுத்திகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டது. இதை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் முறையான பராமரிப்பு இன்றி நாளடைவில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது அடைந்ததால், மேல்நிலைத் தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் குழாய்களுக்கு நேரடியாக தண்ணீர் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.சுத்திகரிக்கப்படாமல் மேல்நிலைத் தேக்கத் தொட்டியில் இருந்து நேரடியாக வரும் தண்ணீரை குடிக்க பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர்,நீண்ட நாட்களாக பழுதடைந்துள்ள ஆர்.ஓ., குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி