சிட்டி கிரிக்கெட்டில் எபினேசர் பள்ளி வெற்றி
சென்னை சிட்டி பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில், நேற்றைய காலியிறுதி ஆட்டத்தில், கொரட்டூர் எபினேசர் பள்ளி, எட்டு விக்கெட் வித்தியாசத்தில், மேற்கு மாம்பலம் அரசு பள்ளியை தோற்கடித்தது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், சிட்டி பள்ளிகளுக்கு இடையிலான, 'யூ - 16' கிரிக்கெட் போட்டிகள், நகரில் பல்வேறு மைதானங்களில் நடக்கின்றன. நேற்று காலை காலிறுதி ஆட்டங்கள் நடந்தன. கேளம்பாக்கம் தாகூர் கல்லுாரியில் நடந்த போட்டியில், கெருகம்பாக்கம் பி.எஸ்.பி.பி., மில்லினியம் பள்ளி, கொளம்பாக்கம் லாலாஜி பள்ளி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற லாலாஜி பள்ளி, பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய, பி.எஸ்.பி.பி., மில்லினியம் பள்ளி, லாலாஜி வீரர்களின் அதிரடியாக பந்து வீச்சில், 30.4 ஓவர்களில், 'ஆல் அவுட்' ஆகி, 99 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த, லாலாஜி பள்ளி, 24.5 ஓவர்களில் நான்கு விக்கெட் இழந்து, 100 ரன்களை அடித்து, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அதேபோல், செங்குன்றம் மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில், மேற்கு மாம்பலம் அரசு பள்ளி, 39.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டை இழந்து, 103 ரன்களை அடித்தது. அடுத்து களமிறங்கிய, கொரட்டூர் எபினேசர் பள்ளி, 25.2 ஓவர்களில் இரண்டு விக்கெட் மட்டும் இழந்து, 104 ரன்களை அடித்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.