விரைவு ரயில் மோதி முதிய தம்பதி பலி
மறைமலை நகர்:மறைமலை நகர் ரயில் நிலையம் அருகில், நேற்று முன்தினம் மாலை விரைவு ரயில் மோதி, வயது முதிர்ந்த இருவர் இறந்து கிடப்பதாக, தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்று, ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த நபர்கள் மறைமலை நகர் அடுத்த ரயில் நகர் பகுதியை சேர்ந்த செந்தில்வேலன், 80, அவரது மனைவி பசும்பொன், 70, என்பது தெரிய வந்தது.இருவரும், ராமேஸ்வரம் செல்ல, செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு செல்வதற்காக, மறைமலை நகர் ரயில் நிலையம் வந்துள்ளனர். வயது முதிர்வு காரணமாக, நடைபாதை மேம்பால படிக்கட்டுகளில் ஏறி செல்லாமல், தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, பல்லவன் விரைவு ரயில் மோதி உயிரிழந்தது, விசாரணையில் தெரிய வந்தது.விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த தாம்பரம் ரயில்வே போலீசார், இருவர் உடலையும் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.நேற்று காலை தண்டவாளம் பகுதியில் இருந்த பாதையை, ரயில்வே ஊழியர்கள் சீமைக்கருவேல மரங்களை வெட்டி அடைத்தனர்.