கல்லுாரி மாணவர்கள் வசதிக்காக அரசு பஸ்கள் இயக்க எதிர்பார்ப்பு
செய்யூர்:புதிதாக துவக்கப்பட்டுள்ள செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்களின் வசதிக்காக, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அரசு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.செய்யூர் வட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இல்லாமல், இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், மார்ச் மாதம் செய்யூரில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்க, அரசாணை வெளியிடப்பட்டது. ஒதுக்கீடு
புதிய கல்லுாரி கட்டடம் அமைக்கும் வரை, இந்தாண்டு தற்காலிகமாக, செய்யூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்லுாரி நடத்த முடிவு செய்து, மே 26ம் தேதி கல்லுாரி துவக்கப்பட்டது.இந்த கல்வி ஆண்டிற்காக 5 பாடப் பிரிவுகளின் கீழ் 270 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கலந்தாய்வுகள் நடந்து வருகின்றன. முதற்கட்ட கலந்தாய்வு, இன்றுடன் நிறைவு பெற உள்ளது.மாணவர் சேர்க்கை முடிந்து, கல்லுாரி துவங்கி காலை 9:00 மணி முதல் மதியம் 1:35 வரை நடக்க உள்ளது. சிரமம்
இந்நிலையில், செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து செய்யூர் பஜார் பகுதிக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால், மாணவர்களுக்கு சிரமம் ஏற்படும். எனவே, சூணாம்பேடில் இருந்து வெடால் வழியாகவும், சோத்துப்பாக்கத்தில் இருந்து சித்தாமூர் வழியாகவும், கடப்பாக்கத்தில் இருந்து எல்லையம்மன் கோவில் வழியாகவும் செய்யூர் வரும் வகையில், பேருந்துகள் இயக்க வேண்டும்.மேலும், கூவத்துாரில் இருந்து வீரபோகம் வழியாகவும், பவுஞ்சூரில் இருந்து அம்மனுார் வழியாகவும், செய்யூருக்கு பேருந்துகள் இயக்க வேண்டும். இந்த பேருந்துகள், காலை 8:30 மணிக்கு செய்யூர் வந்தடையும் விதமாகவும், மதியம் 2:00 மணிக்கு செய்யூரில் இருந்து புறப்படும் விதமாகவும் இயக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.