உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதிதாக மகளிர் காவல் நிலையம் படப்பையில் அமைக்க எதிர்பார்ப்பு

புதிதாக மகளிர் காவல் நிலையம் படப்பையில் அமைக்க எதிர்பார்ப்பு

படப்பை, படப்பையில் புதிதாக மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட மணிமங்கலம் காவல் சரகத்தில், மணிமங்கலம், சோமங்கலம் ஆகிய இரண்டு காவல் நிலையங்கள் உள்ளன. இதில், மணிமங்கலம் காவல் நிலையத்தின் எல்லைப் பரப்பு அதிகமாக உள்ளதால், குற்றச்சம்பவங்கள் நடந்தால் போலீசார் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு தாமதமாகிறது. இதையடுத்து, மணிமங்கலம் காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து, படப்பையில் புதிய காவல் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, பெரியார் நகரில் உள்ள அரசு கட்டடத்தை சீரமைத்து, 1,200 சதுர அடி அளவு கொண்ட கட்டடம் தயார் நிலையில் உள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில், படப்பை காவல் நிலையத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மணிமங்கலம், சோமங்கலம், புதிதாக துவங்கப்பட உள்ள படப்பை ஆகிய மூன்று காவல் நிலைய எல்லைகளை இணைத்து, படப்பையில் புதிய மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மணிமங்கலம், சோமங்கலம் காவல் நிலைய எல்லையில், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச்சம்பவங்களுக்கு புகார் அளிக்க, 18 கி.மீ., துாரத்தில் உள்ள கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இங்கு செல்வதற்கு, நேரடி அரசு பேருந்து வசதியும் இல்லை. இதனால், கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று வர சிரமமாக உள்ளது. படப்பையில் புதிய காவல் நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளதால், மணிமங்கலம், சோமங்கலம், படப்பை காவல் நிலைய எல்லைகளை இணைத்து, படப்பையில் புதிய மகளிர் காவல் நிலையம் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி