உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூட்டுறவு கடன் சங்கத்தில் உரக்கிடங்கு இல்லாததால் விவசாயிகள் தவிப்பு

கூட்டுறவு கடன் சங்கத்தில் உரக்கிடங்கு இல்லாததால் விவசாயிகள் தவிப்பு

சித்தாமூர் : சித்தாமூர் அடுத்த பொலம்பாக்கத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உரக்கிடங்கு இல்லாததால், விவசாயிகள் உரங்கள் வாங்க, மற்ற கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது.சித்தாமூர் அருகே பொலம்பாக்கம் கிராமத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இது 1944ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது.சங்கத்தில் 900க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மத்திய, மாநில மற்றும் நபார்டு நிதி வாயிலாக விவசாயக் கடன், இடுபொருட்களான உரங்கள் வினியோகம், சிறு தவணை மற்றும் நடுத்தர தவணை கடன், நகை கடன், கால்நடை கடன் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் இயங்குகிறது. கட்டடத்தின் மேல் தளத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.உரக்கிடங்கில் மழைக்காலங்களில் கட்டடத்தின் உள்ளே மழைநீர் ஒழுகி, சேமித்து வைக்கப்பட்ட உரங்கள் வீணானதால், 20 ஆண்டுகளுக்கு முன், உரக்கிடங்கு செயல்படாமல் நிறுத்தப்பட்டது.கடந்த 20 ஆண்டுகளாக, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உரக்கிடங்கு இல்லாமல், அருகே உள்ள முகுந்தகிரி, கன்னிமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்று, விவசாயிகள் உரங்கள் வாங்கி வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது.நீண்ட தொலைவில் இருந்து உரங்களை வயல்வெளிக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளதால், விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.எனவே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகள், பொலம்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு புதிய உரக்கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி