வெடாலில் உபரிநீர் கால்வாய் சேதம் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
செய்யூர், வெடால் கிராமத்தில், சேதமடைந்துள்ள உபரிநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செய்யூர் அடுத்த வெடால் கிராமத்தில், 10 கி.மீ., துாரம் கொண்ட, ஏரி உபரிநீர் செல்லும் கால்வாய் உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், இந்த கால்வாய் உள்ளது.வெடால் சுற்றுவட்டார பகுதிகளான விளாங்காடு, போந்துார், வயலுார், தென்னேரிப்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர், இந்த கால்வாய் வழியாக கழிவெளியில் இணைந்து, பின் வங்கக் கடலில் கலக்கிறது.இந்த கால்வாய், இப்பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகளின் நீர்வரத்து கால்வாயாகவும் உள்ளது.இக்கால்வாய் வாயிலாக, 3,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இந்நிலையில், வெடால் பகுதியில் இந்த உபரிநீர் கால்வாய் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, புதரும் வளர்ந்துள்ளதால், மழைநீர் விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்கள் நாசமாகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:வெடால் மற்றும் கடுக்கலுார் கிராமத்திற்கு இடையே செல்லும் உபரிநீர் கால்வாயில் புதர் மண்டி உள்ளதால், 5 ஆண்டுகளுக்கு முன் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது.இதனால், உபரிநீர் விவசாய நிலங்களில் தேங்கி, விவசாயம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து பல முறை மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை இல்லை. ஆண்டுதோறும் இதே நிலை தொடர்வதால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள உபரிநீர் கால்வாயை சீரமைத்து, புதரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.