செங்கை மாவட்டத்தில் பயிர்களை அழிக்கும் காட்டுப்பன்றி 50 சதவீதம் மகசூல் பாதிப்பால் விவசாயிகள் வேதனை
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை காட்டுப் பன்றிகள் நாசம் செய்து வருவதால், 50 சதவீதம் மகசூல் பாதிக்கப்படுகிறது. இதனால், கட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய தாலுகாக்களில், விவசாய நிலங்கள் உள்ளன. மொத்தமாக மாவட்டத்தில், 1 லட்சத்து 60 ஆயிரத்து 537 ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்யப்படுகிறது.இதில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில் உள்ள விவசாய நிலங்களில் நெல் பயிர் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகின்றன.மாவட்டத்தில், விவசாய நிலங்கள் அருகில் செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் ஆகிய வனச்சரக பகுதிகளில், காப்புக்காடுகள் உள்ளன. மொத்தமாக செங்கல்பட்டு மாவட்டத்தில், 42 ஆயிரத்து 650 ஏக்கர் பரப்பளவில், வனப்பகுதி அமைந்துள்ளது.இங்கு மான், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்டவை உள்ளன.இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வனப்பகுதிகளில், காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இவற்றுக்கு வனப்பகுதியில் போதிய உணவு கிடைக்காததால், விவசாய நிலங்களுக்கு படையெடுத்து, அங்கு பயிரிடப்படும் நெல், மணிலா, கரும்பு, தர்ப்பூசணி ஆகியவற்றை உணவாக உட்கொள்கின்றன. குறிப்பாக, இரவு நேரங்களில் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் நெல், மணிலா, தர்ப்பூசணி உள்ளிட்ட பயிர்களை தின்று அழிப்பதுடன், கடுமையாக சேதப்படுத்துகின்றன.இதனால், 50,000 ஏக்கருக்கு மேல், விவசாய நிலங்களில் சாகுபடி பாதிக்கப்படுவதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.மாவட்டத்தில் விவசாய நிலங்களில் சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய பட்டங்களில் நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்களை, விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். பயிர் சாகுபடி நேரங்களில், காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த தனியாக குழு அமைத்து கண்காணிக்க வேண்டுமென, வனத்துறையிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால், பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்திய பின் புகைப்படம் எடுத்து, கிராம நிர்வாக நிர்வாக அலுவலர், வேளாண்மைத்துறை அலுவலர்கள் சான்றிதழ் அளித்த பிறகு, வனத்துறையினர் இழப்பீடு வழங்குகின்றனர்.இதற்கு பதில், சாகுபடி நேரங்களில் வனத்துறையினர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டுமென, விவசாய நலன்காக்கும் கூட்டங்களில், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கடும் அதிருப்தியில் உள்ளனர்.காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை, வனத்துறையினர் செயல்படுத்த வேண்டுமென, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தினால், கிராம நிர்வாக நிர்வாக அலுவலர், வேளாண்மைத் துறை அலுவலர்கள் சான்றிதழ் அளித்த பிறகு, உரிய இழப்பீடு வழங்கி வருகிறோம். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த, குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.- ரவி மீனாமாவட்ட வன அலுவலர்,செங்கல்பட்டு.
சம்பா பருவ நெல் சாகுபடி விபரம்
தாலுகா ஏக்கர்மதுராந்தகம் 45,000செய்யூர் 37,500திருக்கழுக்குன்றம் 26,500திருப்போரூர் 12,500செங்கல்பட்டு 5,000தாம்பரம் 1,500மொத்தம் 1,28,000