இயந்திர நெல் நடவுக்கு மானியம் விவசாயிகளுக்கு அழைப்பு
பவுஞ்சூர்:இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.பவுஞ்சூர் வட்டத்தில் நெல் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. பெரும்பாலான விவசாயிகள் நெல் பயிரிட ஆர்வம் காட்டுகின்றனர், ஆனால் நடவு பணிக்கு விவசாய கூலி தொழிலாளர்கள் கிடைக்காதது, நெல் சாகுபடிக்கு சிக்கலாக உள்ளது.செலவீனம் மற்றும் விதைகள் பயன்பாட்டை குறைக்க, விவசாய ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வாக, இயந்திர நடவு ஊக்குவிக்கப்படுகிறது.இயந்திர நடவுக்காக சிறப்பு வகை நாற்றங்கால் அமைக்கவும், விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டத்தின் கீழ் இயந்திர நெல் நடவு செய்வதற்கு ஒரு விவசாயிக்கு, ஏக்கருக்கு 4,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் நெல் விதைகள், நுண்ணுாட்ட உரக்கலவை மற்றும் உயிர் உரங்கள் அதிகபட்சம் 2.5 ஏக்கர் வரையில் பயனடையலாம்.இயந்திர நடவு மேற்கொள்ளும் விவசாயிகள், சிட்டா, அடங்கல், ஆதார், குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை பவுஞ்சூர் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் வழங்கி பதிவு செய்து பயனடைய விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்து உள்ளது.