காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு வருவாய் கோட்டத்தில், விவசாய நிலங்களை அழிக்கும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். செங்கல்பட்டு சப் - கலெக்டர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், சப் - கலெக்டர் மாலதி ெஹலன் தலைமையில், நேற்று நடந்தது. கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது: செங்கல்பட்டு வருவாய் கோட்டத்தில், விவசாய நிலங்களில் நெற் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகிறது. இதனால், விவசாயிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தால், மணிலா சாகுபடி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்போரூர் தாலுகாவில் உள்ள விவசாயிகள் இடுபொருள்கள் வாங்க, செம்பாக்கத்தில் உள்ள, வேளாண்மைத்துறை அலுவலகத்திற்கு செல்கின்றனர். வேளாண்மைத்துறை அலுவலக வளாகத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், விவசாயிகள் நெல் விதை, உரங்கள் எடுத்துவர வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது. மழைநீர் தேங்கி உள்ளதை அப்புறப்படுத்த வேண்டும். அலுவலகத்திற்கு சுற்றுசுவர் அமைக்க வேண்டும். பெரிய இரும்பேடு பகுதியில், ஊராட்சி ஒன்றிய நிர்வாக கட்டுப்பாட்டில் ஏரிக்கரை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீர் உள்ளதால், தண்ணீர் வற்றியப்பின், பணிகளை செய்ய வேண்டும். கோமாரி நோய் அதிகமாக உள்ளதால், கால்நடைத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும். நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் இருந்து நீர்பாசனத்திற்கு செல்லும், பாசன கால்வாய்கள் துார்வாரி சீரமைக்க வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் பேசினர்.