சாமந்திப்பூ விலை குறைவு விவசாயிகள் கவலை
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் வட்டாரத்தில், சாமந்திப்பூ விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.அச்சிறுபாக்கம் ஒன்றியம் ஒரத்தி, சிறுதாமூர், ராமாபுரம், மோகல்வாடி, எலப்பாக்கம், ஓட்டக்கோவில், தண்டலம், கிளியா நகர் உள்ளிட்ட பகுதிகளில், சாமந்திப் பூவை விவசாயிகள் பயிரிட்டனர்.நடவு செய்த குறைந்த நாட்களில் வரத்து துவங்கி, லாபம் ஈட்டும் பயிராக இருந்தது.கிணற்று பாசனம் வாயிலாக குறைந்த அளவு தண்ணீரில், குறைந்த ஆள் கூலியில் அதிக லாபம் பெறலாம்.ஒரு ஏக்கர் பரப்பளவில் மற்ற பயிர்கள் செய்வதால் கிடைக்கும் லாபத்தை விட, 25 சென்ட் நிலத்தில் சாமந்தி பூ பயிரிட்டு லாபம் பெறலாம்.இதனால் சாமந்தி பூ பயிரிட, விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.தற்போது மல்லி, முல்லை உள்ளிட்ட பூக்களின் வரத்து அதிகரிப்பால், சாமந்திப்பூ விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.ஒரு கிலோ, 10 ரூபாய்க்கு விற்பனையாவதால், சாமந்திப்பூ அறுவடை செய்யும் கூலி தொழிலாளர்களுக்கு கூலி வழங்க முடியாத சூழல் உள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.