கல்பட்டு ஏரியின் மதகு சேதம் தண்ணீர் வீணாகி விவசாயிகள் கவலை
சித்தாமூர்:கல்பட்டு ஏரி மதகு சேதமடைந்து தண்ணீர் வெளியேறுவதால், ஏரியில் தண்ணீர் வற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சித்தாமூர் அடுத்த கல்பட்டு கிராமத்தில், 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இது, பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த ஏரி நீர் மூலமாக, 300க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஏரி மதகு வாயிலாக, நீர் பாசன கால்வாய்களுக்கு தண்ணீர் செல்கிறது. தற்போது, இந்த ஏரியின் மதகு பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ளதால், தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால், ஏரியில் விரைவில் தண்ணீர் வற்றும் நிலை உருவாகி வருகிறது. இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: கல்பட்டு ஏரியின் தண்ணீரை பயன்படுத்தி, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் உள்ள அனைத்து விவசாய நிலங்களிலும், இரண்டு போகத்திற்கு நெல் பயிரிடப்பட்டு வந்தது. ஏரி மதகு சேதமடைந்து உள்ளதால், ஏரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறி, அடுத்த பருவத்திற்கு தண்ணீர் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது, ஒரு போகம் மட்டுமே நெல் உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. சொர்ணவாரி பருவத்தில் நெல் விவசாயம் செய்ய, பருவ மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித் துறை அதிகாரிகள் இந்த ஏரியை ஆய்வு செய்து, முறையாக அளவீடு செய்ய வேண்டும். மேலும், ஏரியை துார்வாரி, சேதமடைந்துள்ள ஏரி மதகுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.