செங்கை -- திருப்போரூர் சாலையில் மணல் குவிந்துள்ளதால் அச்சம்
மறைமலைநகர் : செங்கல்பட்டு -- திருப்போரூர் நெடுஞ்சாலையில் மணல் குவிந்து உள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் நீடிக்கிறது.செங்கல்பட்டு -- திருப்போரூர் சாலை 25 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை தினமும் பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலையை பயன்படுத்தி திருவடிசூலம், சென்னேரி, பெருந்தண்டலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், செங்கல்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இந்த சாலையில் திருப்போரூர் மார்க்கத்தில் முள்ளிப்பாக்கம் கூட்டு சாலை, அந்திரேயபுரம், சென்னேரி உள்ளிட்ட பகுதிகளில் சாலை முழுதும் மணல் குவிந்துள்ளது.இதன் காரணமாக சாலையில் புழுதி பறப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த சாலையில் மணல் அதிக அளவில் குவிந்துள்ளது. இச்சாலை வழியாக பள்ளி, கல்லுாரி வாகனங்கள், தொழிற்சாலை வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.சாலை முழுதும் மணல் பரவி உள்ளதால், வாகனங்களை இயக்குவது சவாலாக உள்ளது. எனவே, இந்த மணல் திட்டுகளை அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.