உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் மீனவ சபைகளின் செயல்பாடுகளால்... குமுறல்!: கட்ட பஞ்சாயத்து நடப்பதாக மீனவர்கள் கொதிப்பு

செங்கையில் மீனவ சபைகளின் செயல்பாடுகளால்... குமுறல்!: கட்ட பஞ்சாயத்து நடப்பதாக மீனவர்கள் கொதிப்பு

சமுதாய நாகரிகம் வளர்ச்சியடைந்த தற்காலத்திலும், மீனவ பகுதிகளில் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில், அராஜக கட்டப் பஞ்சாயத்து நடைமுறைகள் நீடித்து, அப்பாவி மீனவர்கள் பாதிக்கப்படுவதாக, மீனவர்களே குற்றஞ்சாட்டுகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், கானத்துார் ரெட்டிகுப்பம் துவங்கி, இடைக்கழிநாடு ஆலம்பரைகுப்பம் வரையுள்ள, 36 மீனவ கிராமங்களில், மீனவர்கள் வசிக்கின்றனர். கடலில் மீன் பிடித்து விற்று, வருவாய் ஈட்டுகின்றனர். ஒவ்வொரு மீனவ பகுதியிலும், ஊர் கட்டுப்பாடு என்ற கட்டப் பஞ்சாயத்து நடைமுறை, நீண்டகாலமாக நிலவுகிறது. ஒவ்வொரு மீனவ கிராமத்திலும், அதிகமான பங்காளி குடும்பங்கள் கொண்ட பெரும்பான்மை தரப்பினரே, மீனவசபை முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என உள்ளனர்.நிர்வாகிகள் ஆண்டுதோறும், சுழற்சி முறையில் தேர்வு பெறுவர். பங்காளிகள் பெரும்பான்மை அடிப்படையில்தான் சபையின் முடிவாக அமையும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் விதிக்கப்படும் குடி வரி, மீன் ஏல குத்தகை தொகை, பல காரணங்களுக்காக, பிற வகைகளில் பெறப்படும் தொகை ஆகியவை சபையினர் கட்டுப்பாட்டில் இருக்கும். கோவில் திருவிழா, மீனவர் பிரச்னை தொடர்பான பொதுவழக்கு உள்ளிட்ட செலவுகளை, அதிலிருந்தே மேற்கொள்வர்.தற்காலத்தில் பெரும்பாலான சமுதாயங்களில், நாகரிகம் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ள சூழலில், இச்சமூக மக்களிடம் மட்டும், 'பஞ்சாயத்தார்' எனப்படும் மீனவசபை கட்டப் பஞ்சாயத்து அராஜகம், தற்காலத்திலும் நீடிக்கிறது. இதுகுறித்து, நடுநிலை மீனவர்கள் கூறியதாவது:வேறு சமூக மக்களிடம் இல்லாத வழக்கமாக, எங்கள் மக்களிடம் 'பஞ்சாயத்தார்' நிர்வாக நடைமுறை உள்ளது. யாரேனும் ஒரு குடும்பத்தினர், 'பஞ்சாயத்து' முடிவை ஏற்காமல், ஊர் கட்டுப்பாட்டை மீறினால், அவர்களையும், ஆதரவாக செயல்படுவோரையும், 'பஞ்சாயத்தார்' ஊர் கட்டுப்பாடு விதித்து, ஊரிலிருந்து விலக்குவர். அவர்கள் மீன் பிடிக்க கூடாது. மற்றவர்கள், அவர்களிடம் தொடர்பு கொள்ளக்கூடாது. மற்றவர் சுக, துக்கங்களில், கோவில் விழாவில், அவர்கள் பங்கேற்கவும் கூடாது.எங்களுக்குள் மோதல் ஏற்பட்டால், 'பஞ்சாயத்தார்'தான் அதற்கான முடிவோ, தீர்வோ காண்பர். எவரும் போலீசில் புகார் அளிக்க கூடாது. புகார் அளிப்பவருக்கும், அத்தகைய கட்டுப்பாடுகள் உண்டு. கொடுங்கோல் தண்டனை நடைமுறைகளால், ஒவ்வொரு பகுதியிலும், பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.சபை நிர்வாகிகள், தனி ராஜாங்கமே நடத்துகின்றனர். அவர்கள் சொல்வதே சட்டம். இதையறிந்தும், அதிகாரிகளோ, போலீசாரோ கண்டுகொள்வதில்லை. சாதாரண தகராறு, ஆயத தாக்குதல் வரை விஸ்வரூபம் எடுக்கிறது. அனைத்து மீனவ பகுதிகளிலும், 'பஞ்சாயத்தார்' நடைமுறையை, அரசு முற்றிலும் ஒழித்து, அனைவரும் சுதந்திரமாக செயல்பட தீர்வு காணவேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தொடரும் மிரட்டல்கள்

மாமல்லபுரம் அடுத்த, எடையூர் ஊராட்சி, கொக்கிலமேடு மீனவர் வெங்கடேசன் மனைவி ராஜாத்தி. ஊராட்சி துணைத்தலைவராக உள்ளார். பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மழைநீர் வடிகால்வாயை உயர்த்தி கட்டுவது தொடர்பாக, அவரிடம் மீனவர்கள் சிலர் தகராறு செய்தனர். இதையடுத்து, தன்னிடம் தகராறு செய்தவர்கள் மீது, மாமல்லபுரம் போலீசில், அவர் புகார் அளித்தார். மீனவ பகுதி கட்டுப்பாட்டை மீறியதாக, மீனவசபையினர் மிரட்டியதால், புகாரை திரும்பபெற்றார். ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக கொந்தளித்த சபையினர். ஊராட்சி துணைத் தலைவரான அவரையும், ஆதரவாக செயல்பட்ட ஏழு குடும்பத்தையும், ஊரிலிருந்து விலக்கி, கடும் கட்டுப்பாடுகள் விதித்தனர். விரக்தியடைந்த அவர், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளிக்க முயன்று மீட்கப்பட்டார். கூவத்துார் அடுத்த, கடலுார் ஊராட்சி, பெரியகுப்பம் மீனவர் ஞானவேலின் மனைவி ஆதிலட்சுமி, ஊராட்சித் தலைவராக உள்ளார். அங்கு கான்கிரீட் சாலை அமைப்பது தொடர்பாக, மீனவர்கள் அவரிடம் தகராறு செய்தனர். இதுதொடர்பாக, கூவத்துார் போலீசில் அவர் புகார் அளித்த நிலையில், அவர் ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக, அவரது குடும்பத்தையும், மீனவசபையினர் ஊரிலிருந்து விலக்கி, அவரது குடும்பம் மீதான கட்டுப்பாடுகள், தற்போதும் நீடிக்கிறது. புதுப்பட்டினம், வாயலுார் உய்யாலிகுப்பம் ஆகிய மீனவ பகுதிகள் எல்லையில், ஒன்றியக்குழு நிதியில், கான்கிரீட் சாலை அமைப்பது தொடர்பாக, இரண்டு பகுதி மீனவர்களிடம் மோதல் நீடிக்கிறது. இதன் காரணமாக, உய்யாலிகுப்பம் மீனவர்களிடம் தொடர்புகொள்ளக்கூடாது என, புதுப்பட்டினம் மீனவ சபையினர் தடைவிதித்து, அதை மீறுவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாக, எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.கடந்த 17ம் தேதி நடத்திய தாக்குதல் தொடர்பாக, மாமல்லபுரம் போலீசார், இரண்டு தரப்பினர் மீதும் வழக்கு பதிந்து, எட்டு பேரை கைது செய்தனர்.ஊரிலிருந்து விலக்கப்பட்ட குடும்பத்தினரை அவ்வப்போது தாக்குவதால், அவர்கள் பாதுகாப்பு கருதி, வேறிடங்களில் வசிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை