செங்கையில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகள்...390 இடங்கள்!:மீட்பு நடவடிக்கைகளுக்கு 33 குழுக்கள் அமைப்பு
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த ஆண்டுகளில் பெய்த மழை வெள்ளத்தை அடிப்படையாக வைத்து, 390 இடங்கள் அதிகம் பாதிக்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்குவோரை மீட்க, 33 குழுக்களும், 290 தங்கும் முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடந்தது. இதில், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, எடுக்கப்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தான விபரங்கள்:செங்கல்பட்டு மாவட்டத்தில், கடலோரப் பகுதிகளில், 52 மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. மீன்வளத்துறை வாயிலாக அறிவிக்கப்படும் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை, மீனவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.மாவட்டத்தில், 4,500 முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, ஆபத்து காலங்களில் பொதுமக்களுக்கு உதவ, அனைத்து விதத்திலும் தயார் நிலையில் உள்ளனர்.நீச்சல் தெரிந்தவர்கள் 1,262, பாம்பு பிடிப்போர் 158 பேர், மரம் ஏற தெரிந்தவர்கள் 517 பேர் என, மொத்தம் 1,937 பேர், மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்.மாநில பேரிடர் மீட்பு படையில் பயிற்சி பெற்ற 650 அலுவலர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படை அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளனர்.மாவட்டத்தில், மிக அதிகமாக பாதிப்பு ஏற்படும் பகுதிகள் 71, அதிகளவு பாதிப்பு 122, மிதமான பாதிப்பு 124, குறைவான பாதிப்பு 73 என, மொத்தம் 390 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அப்பகுதிகளில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.மேலும், 359 கிராம ஊராட்சிகள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு குழு என, 33 குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும், அனைத்து துறை அலுவலர்கள் 12 பேர் வீதம், 386 பேர் உள்ளனர்.மாவட்டத்தில், 35,600 மணல் மூட்டைகள், இரண்டு பொக்லைன் இயந்திரங்கள், இரண்டு டன் சவுக்கு மர கட்டைகள், 212 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 220 ஜெனரேட்டர்கள், 450 நீர் இறைக்கும் இயந்திரங்கள் தயாராக உள்ளன.வெள்ளம் ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகளில், பயன்பாட்டில் உள்ள படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு, 20 புயல் பாதுகாப்பு மையங்கள், 290 பாதுகாப்பு மையங்கள், 3 புயல் பாதுகாப்பு நிவாரணம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இங்கு, 67,877 பேர் வரை தங்க வைக்க முடியும். கால்நடைகளை பாதுகாக்க, 164 தங்குமிடங்கள் மற்றும் 120 முதல்நிலை பொறுப்பு பயிற்சி அளிக்கப்பட்ட மீட்பர்கள் தயார் நிலையில் உள்ளனர்.சுகாதாரத் துறை வாயிலாக, 50 மருத்துவ குழுக்கள், அரசு மற்றும் தனியார் ஆம்வுலன்ஸ் வசதி தயார் நிலையில் உள்ளன. மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன.
வெள்ளம் பாதிக்கும் பகுதிகள்
செங்கல்பட்டு தாலுகா: செங்கல்பட்டு ஜே.சி.கே., நகர், அனுமந்தபுத்தேரி, கோலபுரம், பாரதியார் தெரு, அண்ணா நகர், திம்மாவரம், மஹாலட்சுமி நகர், காயரம்பேடு, வடகால், வெங்கடாபுரம், அமணம்பாக்கம், காட்டாங்கொளத்துார், பொத்தேரி.திருப்போரூர் தாலுகா: கேளம்பாக்கம், முட்டுக்காடு, ஏகாட்டூர், நெம்மேலி, பட்டிபுலம், சாலவான்குப்பம், இடையான்குப்பம், சாத்தான்குப்பம், முள்ளிப்பாக்கம், ராயமங்கலம், பையனுார், புதுப்பாக்கம்.திருக்கழுக்குன்றம் தாலுகா: பாக்கம், ஈச்சங்கரணை, மாமல்லபுரம், கொக்கிலமேடு, கடம்பாடி, மேலக்குப்பம், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம், வாயலுார், லட்டூர், விட்டிலாபுரம், நடுவக்கரை, சாலுார், பொன்பதிர்கூடம், ஒத்திவாக்கம், மணப்பாக்கம், ஆனுார்.மதுராந்தகம் தாலுகா: மதுராந்தகம் காந்தி நகர், மெய்யூர், ஜமீன்எண்டத்துார், பெருவேலி, முன்னுாத்திகுப்பம், நல்லுார், கொலம்பாக்கம்.செய்யூர் தாலுகா: சூணாம்பேடு, வன்னியநல்லுார், லத்துார், கொடூர், கயப்பாக்கம், இடைக்கழிநாடு.வண்டலுார் தாலுகா: வண்டலுார் ராஜிவ்காந்தி நகர், சதானந்தபுரம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில் மஹாலட்சுமி நகர், அமுதம் காலனி, உதயசூரியன் நகர், பிரியா நகர் உள்ளிட்ட பகுதிகள். தாம்பரம் தாலுகா: தாம்பரம், பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, கோவிலம்பாக்கம், முடிச்சூர், மேடவாக்கம், அகரம்தென், நன்மங்கலம், ஒதியம்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், திருவாஞ்சேரி, சிட்லப்பாக்கம், மடிப்பாக்கம்.பல்லாவரம் தாலுகா: திரிசூலம், கவுல்பஜார், பம்மல், திருநீர்மலை, பொழிச்சலுார்.