உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாலாறு தரைப்பாலத்தில் வெள்ளம் போக்குவரத்து துண்டிப்பு

பாலாறு தரைப்பாலத்தில் வெள்ளம் போக்குவரத்து துண்டிப்பு

வாலாஜாபாத்: பாலாறில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், வாலாஜாபாத் - அவளூர் இடையேயான தரைப்பாலம் மீது நேற்று தண்ணீர் பெருக்கெடுத்தது. இதனால், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதையடுத்து, 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வாலாஜாபாத்தில் இருந்து, பாலாறு தரைப்பாலம் வழியாக அவளூர் கிராமத்திற்கு செல்லும் 1.2 கி.மீ., துாரம் கொண்ட தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தின் வழியாக அங்கம்பாக்கம், அவளூர், கன்னடியன் குடிசை, கணபதிபுரம், மல்லிகாபுரம், தம்மனுார், ஆசூர், கம்மராஜபுரம், இளையனார்வேலுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தோர், வாலாஜாபாத் வழியாக தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர். மேலும், இப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் இத்தரைப்பாலம் வழியை பயன்படுத்தி ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சென்று வருகின்றனர். இதேபோன்று, காஞ்சிபுரம், வாலாஜாபாத், தாம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்வி கூடங்களுக்கு செல்லவும் இந்த தரைப்பால வழியை மாணவ - மாணவியர் பயன்படுத்தி வருகின்றனர். பாலாறில் அதிக அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் இத்தரைப்பாலம் நீரில் மூழ்குவதால் அச்சமயங்களில் வாலாஜாபாத் - அவளூர் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சுற்றி உள்ள கிராமத்தினர் பலரும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், சில தினங்களாக பெய்த தொடர் மழையால் பாலாறில் அதிக அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வாலாஜாபாத் பாலாறு தரைப்பாலம் நேற்று தண்ணீரில் மூழ்கியது. கடந்த ஆண்டில் சேதமாகி சீரமைத்த தரைப்பாலம் பகுதி மீண்டும் உடையக்கூடும் என்ற அச்சத்தால், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தரைப்பாலம் மீது போக்குவரத்தை துண்டித்து போலீசார் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால், அவளூர் சுற்றி உள்ள 15 கிராமங்களைச் சேர்ந்தோர் வாலாஜாபாத் செல்ல, காஞ்சிபுரத்தை சுற்றி வந்து கூடுதலாக 30 கி.மீ., துாரம் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை வாலாஜாபாத் ஒன்றிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் கூறியதாவது: பாலாறில் தற்போது வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் வரத்து உள்ளதால், வாலாஜாபாத் தரைப்பாலத்தின் மீது தண்ணீர் செல்கிறது. இதனால், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பாலாறு தரைப்பாலம் மீது தண்ணீர் குறையும் நிலையில் அதிகாரிகளுடன் ஆலோசித்து அதற்கேற்ப போக்குவரத்து தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும், இவ்வாறு அவர் கூறினார். மூன்று நாட்களுக்கு முன், இத்தரைப்பாலத்தை ஆய்வு செய்த உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், வாலாஜாபாத் - அவளூர் பாலாறின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் வரும் நவம்பம் மாத இறுதியில் துவங்கப்படும் என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ