உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கரிக்கிலி - வெள்ளப்புத்துார் சாலையை சீரமைக்க அனுமதி தராமல் வனத்துறை இழுத்தடிப்பு -

கரிக்கிலி - வெள்ளப்புத்துார் சாலையை சீரமைக்க அனுமதி தராமல் வனத்துறை இழுத்தடிப்பு -

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கரிக்கிலி - வெள்ளப்புத்துார் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், வனத்துறை அனுமதி தராமல் இழுத்தடிப்பு செய்வதால், கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், வனப்பகுதிகளில் குறுக்கிடும் சாலைகளில் சீரமைப்பு பணி மேற்கொள்ள வனத்துறை அனுமதி கிடைக்காததால், பல சாலைகள் சீரழிந்த நிலையில் உள்ளது. சாலை சீரமைப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் எவ்வித போக்குவரத்து வசதியுமின்றி தவிக்கின்றனர்.மதுராந்தகத்தில் இருந்து உத்திரமேரூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, கரிக்கிலி பறவைகள் சரணாலயம் வழியாக வெள்ளப்புத்துார் வரை செல்லும், 3 கி.மீ., துார சாலை உள்ளது.இந்த சாலையில், 1,650 மீட்டர் நீளம், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதி வழியாக செல்கிறது. இச்சாலை, அச்சிறுபாக்கம் ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, வனப்பகுதியில் சாலை அமைக்க, வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதனால், சாலை சீரழிந்து உள்ளதால், கிராம பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். சாலை அமைக்க முடியாமல், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஒதுக்கப்பட்ட 1.25 கோடி ரூபாய் நிதியை, பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.இதுகுறித்து வெள்ளப்புத்துார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜயகுமார் கூறியதாவது:கரிக்கிலி - வெள்ளப்புத்துார் இடையேயான சாலை பல ஆண்டுகளாக சீரழிந்த நிலையில் உள்ளது. சீரமைக்க கிராம மக்கள் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனம் வர முடியாத சூழல் உள்ளது.தற்போது, இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டியில் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதால் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.எனவே, சாலை அமைக்க ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்பட முடியாமல், திருப்பி அனுப்ப வேண்டிய சூழல் உள்ளது.எனவே, வனத்துறையினர் சாலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். கிராம வளர்ச்சிக்கு வனத்துறை அதிகாரிகள் உறுதுணையாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ