பயிற்சி இல்லாத ஓட்டுனர்களால் குப்பை சேகரிப்பு வாகனங்கள் வீண்
தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சியில் குப்பை சேகரிக்கும் பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அந்நிறுவனம் முறையாக பணி செய்யாததால், எங்கு பார்த்தாலும் குப்பையாகவே காணப்படுகிறது.குறுகலான தெருக்களில், பொக்லைன் வாகனம் செல்ல முடியாத காரணத்தால், குப்பை சேகரிக்கும் பணி பாதிக்கப்படுகிறது.இதனால், 1.17 கோடி ரூபாய் செலவில், ஐந்து சிறிய வகை பொக்லைன் வாகனங்கள் வாங்கப்பட்டு, அக்., 30ம் தேதி, அந்த வாகனங்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டன.ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு வாகனம் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆனால், பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்ட நாளில் இருந்து, மாநகராட்சி அலுவலக வளாகத்திலேயே, ஐந்து வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முறையான பயிற்சி பெற்ற ஓட்டுனர்கள் இல்லாத காரணத்தால், வாகனங்கள் வீணாகும் நிலை உள்ளது.மாநகராட்சி ஓட்டுனர்களுக்கு முறையான பயிற்சி அளித்து, ஐந்து வாகனங்களையும் மண்டலங்களுக்கு ஒதுக்கி, குப்பை சேகரிப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.