ஊரப்பாக்கம் ரேவதிபுரத்தில் குப்பை தேக்கம்
கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ரேவதிபுரத்தில், பிரதான சாலையில் பல நாட்களாக குப்பபை தேக்கமடைந்து உள்ளது. குப்பையை அகற்ற ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து, அப்பகுதியினர் தெரிவித்ததாவது:ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், ஆங்காங்கே சாலைகளில் குப்பை தேக்கமடைந்து, துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. குப்பையை கால்நடைகள், நாய்கள் கிளறி, இழுத்து போடுகின்றன. இதானல், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது. எனவே ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், சாலை ஓரம் தேங்கி உள்ள குப்பையை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.