கோவில் இடத்தில் இயங்கும் அரசு பள்ளி அம்பாள் பெயரை சூட்டாமல் அலட்சியம்
திருக்கழுக்குன்றம்,திருக்கழுக்குன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில் இடத்தில் இயங்கும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, திரிபுரசுந்தரி அம்மன் பெயரை சூட்டாமல் கல்வித்துறை அலட்சியப்படுத்துவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருக்கழுக்குன்றத்தில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கடந்த 25 ஆண்டுகளாக இயங்குகிறது. இங்கு இயங்கிய அரசு மேல்நிலைப் பள்ளியை பிரித்து, கடந்த 1998ல், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்கப்பட்டது.இதையடுத்து, அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டு இயங்குகிறது.ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள வேதகிரீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, புல எண் 459ல் உள்ள ஐந்து ஏக்கர் நிலம் பெண்கள் பள்ளிக்காக வழங்கப்பட்டு, பள்ளி துவக்கப்பட்டது.கோவில் இடத்தில் துவக்கிய பள்ளிக்கு, அம்பாள் திரிபுரசுந்தரி அம்மன் பெயரை சூட்ட வேண்டும் என்ற வேண்டுகோளுடன், கோவில் நிர்வாகம் பள்ளிக்கு இடம் வழங்கியது.ஆனால் பள்ளிக்கல்வித் துறையோ, கோவில் நிர்வாகத்தின் வேண்டுகோளின்படி தற்போது வரை பள்ளிக்கு அம்பாள் பெயரை சூட்டாமல் அலட்சியப்படுத்துகிறது.அரசுப் பள்ளி அல்லது கல்லுாரிக்கு, தானமாக இடம் வழங்குவோர், பெரும்தொகை நன்கொடை அளிப்போர் பெயரை சூட்டுவது, அரசின் நடைமுறையில் உள்ளது. ஆனால், இப்பள்ளிக்கு மட்டும் அம்பாள் பெயரை சூட்டாமல் புறக்கணிக்கப்படுகிறது.இந்நிலையில், கோவில் இடத்தில் இயங்கும் பள்ளிக்கு, அம்பாள் பெயரை சூட்ட வேண்டும் அல்லது நீண்டகால குத்தகை அடிப்படையில், கோவில் நிர்வாகத்திற்கு மாத வாடகை செலுத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.