உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விளையாட்டு மைதானம் இல்லாமல் அரசு பள்ளி மாணவியர் அவதி

விளையாட்டு மைதானம் இல்லாமல் அரசு பள்ளி மாணவியர் அவதி

திருப்போரூர்:திருப்போரூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், விளையாட்டு மைதானம் இல்லாமல், மாணவியர் அவதிப்படுவது குறித்து, கலெக்டர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். திருப்போரூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், திருப்போரூர், கண்ணகப்பட்டு, காலவாக்கம், தண்டலம், ஆலத்துார், மடையத்துார், சிறுதாவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி, 1996ல் உயர்நிலை பள்ளியாகவும், 2009ல், மேல்நிலை பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள, இப்பள்ளியில், மாணவியருக்கு விளையாட்டு மைதானம் இல்லை. அதற்கான இடவசதியும் இல்லை. அதேநேரத்தில், அருகேயுள்ள ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு, 7 ஏக்கர் பரப்பில் விளையாட்டு மைதானம் உள்ளது. அதனால், மகளிர் பள்ளிக்கு தனியாக விளையாட்டு மைதானம் ஏற்படுத்த வேண்டும் எனவும், ஆண்கள் பள்ளி மைதானத்தின் ஒரு பகுதியை இதற்காக ஒதுக்கி தர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வந்தது. இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா, நேற்று ஆண்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டார். அப்போது, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், பேரூராட்சி தலைவர் தேவராஜ், மகளிர் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கணேசன், தாசில்தார் சரவணன், பொதுப்பணித்துறை அதிகாரிகள், தண்டலம் ஊராட்சி தலைவர் ஆனந்தன் உள்ளிட்டோரிடம் ஆலோசனை மேற்கொண்டார். விரைவில், மகளிர் பள்ளிக்கு தனி விளையாட்டு மைதானம் அமையும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை