உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நடத்தாத பாடத்திற்கு காலாண்டு தேர்வு அரசு பள்ளி மாணவ - மாணவியர் சிரமம்

நடத்தாத பாடத்திற்கு காலாண்டு தேர்வு அரசு பள்ளி மாணவ - மாணவியர் சிரமம்

சென்னை : பெரும்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளி, மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. இங்கு, 530 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.இப்பள்ளியில் வேளாண் படிப்பு, ஆங்கிலவழி கல்வியில் துவங்கப்பட்டது. ஆனால், நான்கு மாதங்களாக பாடம் நடத்தவில்லை.இந்நிலையில், பிளஸ் 1 வகுப்பிற்கான காலாண்டு தேர்வில், வேளாண் படிப்பிற்கான தேர்வு, இரு நாட்களுக்கு முன் நடந்தது.ஆங்கிலவழி மாணவர்களுக்கு தமிழில் கேள்வித்தாள் வந்தது. அதை, 'கூகுள்' மொழிமாற்ற செயலி வாயிலாக ஆங்கிலத்தில் மாற்றி பிரின்ட் எடுத்து, தேர்வு நாளில் வழங்கப்பட்டது. இதனால், மாணவர்கள், தேர்வு எழுதுவதில் சிரமப்பட்டனர்.இது குறித்து பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் கேட்டனர். இதற்கு, தலைமையாசிரியர் முறையான பதில் அளிக்கவில்லை.பெற்றோர் கூறியதாவது:எங்கள் பிள்ளைகள், முதல் தலைமுறையாக பள்ளி, கல்லுாரிக்கு செல்கின்றனர். படிப்பு குறித்து முழு விபரம் எங்களுக்கு தெரியாததால், தலைமையாசிரியர் கூறுவதை நம்புகிறோம்.ஆனால், எங்கள் பிள்ளைகளுக்கு பிடிக்காத பாடப்பிரிவை திணித்து, படி என்று கூறினால் எப்படி படிப்பர். பாடப்புத்தகம் வழங்காமல், பாடம் நடத்தாமல் காலாண்டு தேர்வு எழுதியுள்ளனர்.அவர்களாகவே, எங்கள்பிள்ளைகளுக்கு வேளாண் படிப்பை திணித்தனர். இப்போது திடீரென நர்சிங் குரூப் எடுத்து படிக்க வற்புறுத்தினர். இல்லையென்றால், டி.சி., வாங்கி செல்லுங்கள் என அலட்சியமாக பதில் கூறுகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.பள்ளி தலைமையாசிரியர் எழிலி கூறியதாவது:தமிழகத்தில் முன்மாதிரியாக இருக்க, ஆங்கில பாடத்தில் வேளாண்மை பிரிவு துவங்கினோம். ஆங்கிலத்தில் பாடப்புத்தகம் வழங்காததால், கல்வி 'டிவி'யை காட்டி பாடம் எடுத்தோம்.கேள்வித்தாள் தமிழில் வருவது குறித்து, கடைசி நேரத்தில் தெரிந்ததால், அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வழங்கினோம். இதை மாணவ - மாணவியர் விரும்பவில்லை.இதனால், வேளாண் பிரிவை நீக்கி, நர்சிங் பிரிவு வழங்கி, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வு நடத்த உள்ளோம். இது குறித்து, மாணவ - மாணவியர், பெற்றோரிடம் புரிய வைத்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.செங்கல்பட்டு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஆங்கில பாடத்திட்டத்தில் வேளாண் பிரிவு துவங்கவில்லை. இந்த பள்ளியில் எங்களுக்கு தெரியாமல், பாடத்திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.'பெற்றோர், ஆசிரியர்களிடம் விசாரித்து, மாணவர்கள் எதிர்காலம் பாதிக்காத வகையில், பாடப்பிரிவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி நிர்வாக குளறுபடி குறித்தும் விசாரிக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !