மருத்துவ கழிவு கொட்டிய மருத்துவமனைகள் நடவடிக்கை எடுக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
சென்னை:பல்லாவரம் ஏரிக்கரை மற்றும் அதையொட்டிய காலியிடங்களில், செப்., 24ம் தேதி அதிகாலை, லாரிகளில் எடுத்து வரப்பட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருப்பது குறித்து, தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளிடம், அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.அதிகாரிகள் ஆய்வில், அங்கு 5 டன் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு இருப்பது தெரிந்தது.மணப்பாக்கம் மியாட் மருத்துவமனை மற்றும் பெருங்குடி ஜெம் மருத்துவமனைகளின் மருத்துவ கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது.தொடர்ந்து, இரு மருத்துவமனைகள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி, சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில், தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் புகார் அளித்தனர்.இது தொடர்பாக, செப்., 25ல் நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, தாம்பரம் மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டது. சம்பந்தப்பட்ட இரு தனியார் மருத்துவமனைகளுக்கும் 'நோட்டீஸ்' அனுப்பியது.இந்நிலையில், இந்த வழக்கு தீர்ப்பாயத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தாம்பரம் மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இரு தனியார் மருத்துவமனைகளுக்கும் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து தலா, 5 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளன. பல்லாவரம் ஏரிக்கரையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் முழுவதும் அகற்றப்பட்டு விட்டன' என்றார்.தொடர்ந்து தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், 'பல்லாவரம் ஏரிக்கரையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்டதற்கான செலவு முழுவதையும், அங்கு குப்பை கழிவுகளை கொட்டிய இரண்டு தனியார் மருத்துவமனைகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.'அபாயகரமான மருத்துவ கழிவுகளை ஏரிக்கரையில் கொட்டிய தனியார் மருத்துவமனைகள் மீதும்,தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.'இது போன்ற பிரச்னைகள் எழும்போது, தீர்ப்பாயம் உத்தரவிடும் வரை காத்திருக்காமல் தகவல் கிடைத்த உடனேயே மாநில மாசு கட்டுப்பட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.