உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இ.சி.ஆர்., விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்ட தடை இல்லை பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

இ.சி.ஆர்., விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்ட தடை இல்லை பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை, 'பசுமை குழு வழிகாட்டுதலை பின்பற்றியே மரங்கள் அகற்றப்படுவதால், இ.சி.ஆர்., விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்ட தடை இல்லை' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.நான்கு வழிச்சாலையான இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலை, திருவான்மியூர் முதல் அக்கரை வரை, 10.5 கி.மீ., துாரம், ஆறு வழியாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.இதற்காக நீலாங்கரை முதல் அக்கரை வரை, சாலையோரங்களில் உள்ள வாகை, அசோகா, பாதாம், உதயம், வேம்பு உள்ளிட்ட மரங்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.இது தொடர்பாக, நம் நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து தீர்ப்பாயம் விசாரித்தது.

அனுமதி

அதில், 'மரங்களை வெட்டி அகற்றாமல், வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நட வேண்டும். ஒரு மரம் வெட்டப்பட்டால் அதற்கு மாற்றாக வேறொரு இடத்தில் 10 மரங்கள் நட வேண்டும். நடப்பட்ட மரங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா, மரங்களை நடுவதற்கு தேவையான பணம் முழுமையாக வனத்துறைக்கு செலுத்தப்படுகிறதா என்பதையும் நெடுஞ்சாலைத்துறை தெரிவிக்க வேண்டும்' என உத்தரவிட்டது.இந்நிலையில் இந்த வழக்கு, தீர்ப்பாயத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக நெடுஞ்சாலைத்துறை தாக்கல் செய்த அறிக்கை:இ.சி.ஆர்., விரிவாக்கத்திற்காக முதற்கட்டமாக கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதியில் 123 மரங்கள் அகற்றப்பட்டன. அதற்கு மாற்றாக 1,230 மரங்களை நடுவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இரண்டாம் கட்டமாக, நீலாங்கரை முதல் சோழிங்கநல்லுார் வரை 856 மரங்களை அகற்ற வேண்டும். அதில் 758 மரங்களை அகற்ற, மாவட்ட பசுமை குழு அனுமதி அளித்துஉள்ளது. அதற்கு மாற்றாக 7,580 மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என, பசுமை குழு உத்தரவிட்டுஉள்ளது.அந்த வகையில் 97 மரங்கள், அதற்கென நிபுணத்துவம் பெற்ற தனியார் நிறுவனம் வாயிலாக வேரோடு பிடுங்கப்பட்டு, சோழிங்கநல்லுாரில் உள்ள ஸ்ரீராமன் தாங்கல் ஏரிக்கரையில் நடப்பட்டது. இதற்கு 3.26 கோடி ரூபாய் தேவைப்படும். முதற்கட்டமாக வனத்துறைக்கு 50 லட்சம் ரூபாயும், இரண்டாம் கட்டமாக 25.01 லட்சம் ரூபாயும் வனத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. மறுநடவு செய்யப்பட்ட மரங்கள் துளிர்த்துள்ளன.

பராமரிப்பு

அகற்றப்பட்ட மரங்களுக்கு மாற்றாக, ஆவடியில் உள்ள கனரக தொழிற்சாலையில் 1,400 புதிய மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. 8,810 மரக்கன்றுகளை நடும் பணிகள், நவம்பர் இறுதிக்குள் முடிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பசுமைக்குழுவின் வழிகாட்டுதல்களை பின்பற்றியே மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளதால், மரங்களை வெட்ட தடை விதிக்காமல், இந்த வழக்கை, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் முடித்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை