நிறுவனங்கள் நிதியில் நாவலுார் ஏரி பராமரிப்பு: பசுமை தீர்ப்பாயம் யோசனை
சென்னை:'சிப்காட் தொழில் நிறுவனங்களிடம் நிதி வசூலித்து, நாவலுார் பெரிய ஏரியை பராமரிக்கலாம்' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் யோசனை தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், நாவலுாரில், 33 ஏக்கர் பரப்பில் பெரிய ஏரி உள்ளது. நீர்வளத்துறையின் பராமரிப்பில் இருந்த ஏரி, 10 ஆண்டுகளுக்கு முன், சிப்காட் எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஏரி கான்கிரீட் கழிவுகளால் நிரப்பப்பட்டு உள்ளதாகவும், ஆக்கிரமிப்புகளால் ஏரியின் பரப்பு, 10 ஏக்கராக குறைந்து விட்டதாகவும், 2023 ஜூலையில் நாளிதழ்களில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரித்த, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், செங்கல்பட்டு கலெக்டர், சிப்காட் அதிகாரிகளுக்கு பல்வேறு இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு: செங்கல்பட்டு கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையில், 'நாவலுார் ஏரியில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த குடிசைகள் அகற்றப்பட்டு, செய்யூர் தாலுகா, பெரியவேலிக்காடு கிராமத்தில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டு, பட்டா வழங்கப்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளார். சிப்காட் அதிகாரிகள் தாக்கல் செய்த அறிக்கையில், 'நாவலுார் ஏரிக்குள், தொழில்துறை நடவடிக்கையோ, நிரந்தர கட்டுமானங்களோ மேற்கொள்ளப்படவில்லை. 'துார்வாரப்பட்ட பின், ஏரியின் நீர் பரப்பு, 10.60 ஏக்கரிலிருந்து, 14.82 ஏக்கராக அதிகரித்துள்ளது. 'சிப்காட்டிலிருந்து வரும் மழைநீரை சுத்திகரிக்க, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கரையில், 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. 'பாறை வாழ்விட தீவு, நடைபயிற்சி பாதை, சைக்கிள் பாதை, வாகன நிறுத்திடம், கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன' என, கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக புகைப்படங்களையும் சிப்காட் அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர். ஆக்கிரமிப்புகள், கழிவுகள் அகற்றப்பட்டு மீட்டெடுக்கப்பட்டுள்ள, நாவலுார் ஏரியை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். இனி யாரும் ஆக்கிரமிக்காமல் இருக்கவும், குப்பை கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், மழைநீர் சேமிப்பு அமைப்புகள் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக, சிப்காட் தொழில் நிறுவனங்களிடம் இருந்து நிதி வசூலிக்கலாம். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.