காப்பு காடு பகுதியில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு
மறைமலை நகர்,காப்பு காடு பகுதியில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளது. மறைமலை நகர் நகராட்சி பகுதியை சுற்றி கூடலுார், காட்டூர், பனங்கொட்டூர், கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி, 2,000 ஏக்கர் பரப்பளவில் காப்பு காடுகள் உள்ளன. இந்த பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்களும் உள்ளன. இங்கு இரவு நேரங்களில் பிளாஸ்டிக் குப்பையை வாகனங்களில் கொண்டு வந்து, காப்புகாடு ஓரமாக கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், குப்பையை தீ வைப்பதால் ஏற்படும் புகை, அருகேயுள்ள குடியிருப்பு பகுதிக்கு பரவுகிறது. தீ காப்பு காடுகளில் பரவி உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட வனத்துறை அதிகாரிகள், குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.