நடுரோட்டில் பழுதான கனரக வாகனம் கூடுவாஞ்சேரியில் போக்குவரத்து நெரிசல்
கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகிலுள்ள ஜி.எஸ்.டி., சாலையில், நேற்று முன்தினம் இரவு கோயம்பேடில் இருந்து மூலப்பொருட்களை ஏற்றிக் கொண்டு, பாண்டிச்சேரி நோக்கி 'ஈச்சர்' கன ரக வாகனம் சென்றது.அப்போது, கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகில் வரும் போது, வாகனம் பழுதடைந்து, சாலை நடுவே நின்றது. அதிக பாரம் இருந்ததால், வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்த முடியவில்லை.இதனால், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை வரை வாகன நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகளின் புகாரைத் தொடர்ந்து, கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பழுதாகி நின்ற வாகனத்தின் பின்புறம் இரும்பு தடுப்புகள் வைத்து, செங்கல்பட்டு நோக்கிச் செல்லும் வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல வழி செய்தனர்.அதன் பின், வாகனத்தின் பழுது நீக்கப்பட்டு, நேற்று மதியம் 12:30 மணியளவில் சென்றது. இதனால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள்மற்றும் அணுகு சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.