குண்ணவாக்கம் சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை
சிங்கபெருமாள் கோவில்:மகேந்திரா சிட்டி அருகே, குண்ணவாக்கம் ஏரிக்கரை சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து, இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. காட்டாங்கொளத்துார் ஒன்றியம், குண்ணவாக்கம் ஊராட்சியில் உள்ள குண்ணவாக்கம் -- அனுமந்தை ஏரிக்கரை சாலை 2 கி.மீ., உடையது. இந்த சாலையைப் பயன்படுத்தி குண்ணவாக்கம், ஈச்சங்கரணை உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இருசக்கர வாகனங்கள் மூலமாக மகேந்திரா சிட்டி பகுதியிலுள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் சென்று வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த சாலை, கனரக வாகனங்களால் கடுமையாக சேதமானது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையேற்று, புதிய சாலை அமைக்கப்பட்டது. அத்துடன், குறுகலான இச்சாலையில் கனரக வாகனங்கள் செல்லும் போது, இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவியது. இதனால், சாலையின் இருபுறமும் உள்ள முகப்பு பகுதியில் இரும்பு தடுப்பு அமைத்து, கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.