தடுப்பில்லாத குளக்கரை சாலை கரணம் தப்பினால் மரணம்
மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் உள்ள அண்ணா நகர் குளக்கரை பகுதியில், பொதுமக்கள் நீண்டகாலமாக வசிக்கின்றனர். பேரூராட்சி நிர்வாகம், பிற பகுதிகளில் சாலை அமைத்து, குளக்கரை பகுதியில் சாலை, தெருவிளக்கு ஆகியவை அமைக்காமல் புறக்கணித்தது.அதனால், இப்பகுதியினர் மண் பாதையில் நடந்து, இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.இங்கு சாலை அமைக்குமாறு, பேரூராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தினர். தற்போது, சிமென்ட் கல் சாலை, எல்.இ.டி., தெரு விளக்கு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.சாலைப்பகுதி மேடாக அமைந்து, அதை ஒட்டியே குளம் அபாய பள்ளமாக உள்ளது. குளமும் கழிவுநீர் சாக்கடையாக உள்ளது. சாலை அமைக்கும் போதே, சாலையை ஒட்டி கருங்கல் தடுப்பு அமைக்குமாறு, இப்பகுதியினர் வலியுறுத்தினர்.ஆனால், தடுப்பு அமைக்காமலேயே சாலை அமைக்கப்பட்டு, சாலையோரம் அபாய பள்ளமாக உள்ளது. சில நாட்களுக்கு முன், சைக்கிள் ஓட்டிச்சென்ற பள்ளி மாணவி, குளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானார்.எனவே, விபத்துகளை தவிர்க்க, சாலையோரம் சற்று அகலத்திற்கு, கிராவல் மண் நிரப்பி தடுப்பு அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்துகின்றனர்.