வேடந்தாங்கல் சரணாலயத்தில் வலசை பறவைகள் அதிகரிப்பு
மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த ஏரி, 86 ஏக்கர் பரப்பளவு உடையது. இந்த ஏரி, 16 அடி உயரம் நீர்ப்பிடிப்பு கொண்டது. தற்போது, 11 அடி தண்ணீர் உள்ளது.தற்போது, வங்கதேசம், மியான்மர், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நம்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வலசை பறவைகள் அதிகரித்துள்ளன. நத்தை கொத்திநாரை, பாம்பு தாரா, சாம்பல் நாரை, நீர் காகம், புள்ளி மூக்கு வாத்து, வெள்ளை அரிவாள் மூக்கன், நாமக்கோழி, மிளிர் உடல் அரிவாள் மூக்கன், வக்கா, கூழைக் கடா, குருட்டு கொக்கு உள்ளிட்ட, 2500க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு முகாமிட்டு உள்ளன.இங்கு செப்டம்பர் மாத கடைசி வாரத்தில், குளிர்காலத்தில் பறவைகள் வலசை வர துவங்குகின்றன. அக்டோபர் மாதத்தின் துவக்கத்தில், 400க்கும் குறைவான பறவைகள் இருந்தன. தற்போது, சில நாட்களாக, 2,500 பறவைகள் வந்துள்ளன.வரும் நாட்களில், வலசை பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பறவைகள் உணவு தேடலுக்காக அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு சென்று வருகின்றன.காலை 6:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை சரணாலயம் திறந்திருக்கும். சுற்றுலா பயணியர் காலை, மாலை நேரங்களில் வந்தால், பறவைகளை கண்டு ரசிக்கலாம் என, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அதிகாரிகள் தெரிவித்தனர்.வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் உள்ளே பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட உணவு, தின்பண்டங்கள் கொண்டு செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.சரணாலயத்தின் உள்ளே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. சுற்றுலா வரும் பயணியர், ஸ்டீல் கேன்களில் தண்ணீர் கொண்டு வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரங்கு தொல்லை
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணியரை அச்சுறுத்தும் வகையில், மரங்களில் குரங்குகள் அதிகமாக காணப்படுகின்றன. 100க்கும் மேற்பட்ட குரங்குகள், சுற்றுலா வரும் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் குழந்தைகள், பெண்களை அச்சுறுத்துகின்றன. எனவே, வனத்துறையினர், குரங்குகளை பிடித்து, காப்பு காடுகளில் விட வேண்டும் என, சுற்றுலா பயணியர் எதிர்பார்க்கின்றனர்.