மேலும் செய்திகள்
இந்திய நாட்டிய விழா மாமல்லையில் இன்று துவக்கம்
22-Dec-2024
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், இந்திய நாட்டிய விழாவை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், துவக்கினார்.விழாவில், அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது:தமிழகத்தில் உள்ள 300 சுற்றுலா இடங்களை தேர்ந்தெடுத்து, சர்வதேச தர வசதிகளை மேம்படுத்த, முதல்வர் ஸ்டாலின் முயற்சித்து வருகிறார். தமிழக பாரம்பரிய உச்சமாக, கட்டடக் கலையின் சிகரமாக திகழ்கின்ற இடம் மாமல்லபுரம். பல்வேறு நாடுகளிலிருந்தும், பயணியரை ஈர்க்கிறது.வெளிமாநிலங்களிலிருந்தும், உலகில் பல்வேறு நாடுகளில் இருந்தும், அதிக அளவில் பயணியர் சுற்றுலா வரும் மாநிலமாக, தமிழகம் உள்ளது. 2007 - 08 முதல், நாட்டிய விழா ஒரு மாதம் விழாவாக நடத்தப்படுகிறது. 2009 முதல், மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து, இந்திய நாட்டிய விழாவாக நடத்துகிறது.சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டால், கடந்த ஆண்டில், 28.71 கோடி பயணியர், தமிழகம் வந்துள்ளனர்.சுற்றுலாத் துறையில் தமிழகம், உலக அளவில், தேசிய அளவில் பல விருதுகளை பெற்றுள்ளது. மாமல்லபுரத்திற்கு பொது, தனியார் பங்களிப்பு திட்டமாக, 8 கோடி ரூபாய் மதிப்பில், ஒளிரும் பூங்கா பணிகள் நடக்கின்றன.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி வளாகத்தில், 20 கோடி ரூபாய் மதிப்பில், மாநாட்டு அரங்கம் கட்டப்பட உள்ளது. கடற்கரை கோவில் பகுதியில், 30 கோடி ரூபாய் மதிப்பில், திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நந்தவன பூங்கா திட்டத்திற்காக, மத்திய அரசிடம் 100 கோடி ரூபாய் பெறப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.சுற்றுலாத்துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன், இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதிஷ், கலெக்டர் அருண்ராஜ், சோழிங்கநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், பரத கலைஞர் பார்வதி ரவி கண்டசாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதைத்தொடர்ந்து பரதம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
22-Dec-2024