உள்நோயாளிகளுக்கு கட்டிய கட்டடம் மாமல்லை மருத்துவமனையில் பாழ்
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில், உள்நோயாளிகள் தேவைக்காக கட்டப்பட்ட கட்டடம், பயன்படுத்தப்படாமல் சீரழிகிறது.மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதியில், அரசு மருத்துவமனை இயங்குகிறது. மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியினர், இங்கு புறநோயாளிகளாக காய்ச்சல், காயம், மகப்பேறு உள்ளிட்ட சிகிச்சை பெறுகின்றனர். தொடர் சிகிச்சைக்காக, உள்நோயாளிகளாகவும் தங்குகின்றனர். உள்நோயாளிகள் தங்க, 20 படுக்கைகளே உண்டு. மருத்துவமனை கட்டடம் சீரழிந்து, உள்நோயாளிகள் தங்குவது சிக்கலாக உள்ளது.சில ஆண்டுகளாக, உள்நோயாளிகள் அதிகரிக்கும் சூழலில், கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தும் அவசியம் குறித்து, சுகாதார நிர்வாகம் அரசிடம் பரிந்துரைத்தது.இதையடுத்து, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், 2021 - 22ன் திட்டத்தில், ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.உள்நோயாளிகள் மற்றும் உடனிருப்பவர்கள் என, 80 பேர் தங்குவதற்கேற்ற கட்டடத்தை, ஓராண்டிற்கு முன் பேரூராட்சி நிர்வாகம் கட்டியது. இந்த கட்டடத்தின் முன்புறம் தாழ்வாக உள்ளதால், மழைநீர் குளம்போல் தேங்குகிறது. இதை தவிர்க்க, அங்கு கிராவல் மண் நிரப்பி மேடு ஏற்படுத்தி கட்டடத்தை திறக்க, முந்தைய கலெக்டர் ராகுல்நாத் அறிவுறுத்தினார்.தற்போது வரை, கிராவல் மண் நிரப்பப்படாமல், மழைநீர் தேங்குகிறது. இதையடுத்து, தன்னார்வ நிறுவனம் ஒன்றின் பராமரிப்பில் கட்டடத்தை ஒப்படைக்க, கடந்த மார்ச் மாதம் பேரூராட்சி மன்ற தீர்மான அனுமதியும் பெறப்பட்டது. ஆனாலும், பயன்பாட்டிற்கு கொண்டுவருவது தாமதமாகி, இந்த கட்டடம் பயனின்றி சீரழிகிறது. எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.