நல்லான்செட்டி குளக்கரையில் தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஏழாவது வார்டில், கெங்கையம்மன் கோவில் அருகே நல்லான்செட்டி குளம் உள்ளது. வறட்சி காலத்திலும் தண்ணீர் வற்றாமல் இருக்கும் இக்குளம், சுற்றுப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், படித்துறைகள் மற்றும் கரைகள் அமைத்து சீரமைக்கப்பட்டன. அதன் பின் முறையான பராமரிப்பில்லாமல், குளத்தினுள் ஏராளமான ஆகாயத்தாமரை செடிகள், குப்பை கழிவுகள் அடர்ந்து காணப்பட்டன. குளத்தின் கரைப்பகுதிகளும் புதர் மண்டி இருந்தன.சில மாதங்களுக்கு முன், இந்த குளத்தை கலெக்டர் அருண்ராஜ் ஆய்வு செய்து, விரைவில் சீரமைக்க உத்தரவிட்டார்.இதையடுத்து, பேரூராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், கனரக இயந்திரம் வாயிலாக குளம் துார் வாரப்பட்டது. மின் விளக்கு அமைத்தல், குளக்கரை படித்துரை, நடைபாதை, தடுப்பு சுவர் என, குளம் முழுதும் மேம்படுத்தப்பட்டது.ஆனால், குளத்தின் வடக்கு பகுதி, ஒரு புறத்தில் மட்டும் பாதுகாப்பு தடுப்பு அமைக்கப்படவில்லை. இதனால் நடைபயிற்சிக்கு வருவோர், குளத்தை ஒட்டியுள்ள விளையாட்டு பூங்காவிற்கு வரும் சிறுவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக, அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர்.அதேபோல், குளத்தின் படிக்கட்டுகளை மேலும் 10 அடி சாய்தள நீளத்திற்கு அமைக்கவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.கடந்த 10 ஆண்டுக்களுக்கு மேலாக பராமரிப்பில்லாமல் கிடந்த குளத்தை சிறப்பாக மேம்படுத்தியதுபோல, மேற்கண்ட பணிகளையும் செய்ய வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.