உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சூணாம்பேடு- - தாம்பரம் வரை பஸ் இயக்க வலியுறுத்தல்

சூணாம்பேடு- - தாம்பரம் வரை பஸ் இயக்க வலியுறுத்தல்

சூணாம்பேடு:சூணாம்பேடு- - தாம்பரம் இடையே அரசு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுப்பகுதி கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.சூணாம்பேடு ஊராட்சியில், 10,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.சுற்றுவட்டார பகுதியில் உள்ள மணப்பாக்கம், புதுப்பட்டு, வில்லிப்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்கள் வெளியூர்களுக்குச் செல்ல, சூணாம்பேடு பஜார் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.இப்பகுதியில் இருந்து மதுராந்தகம், செங்கல்பட்டு, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் பலர் பல்வேறு பணிகளுக்காக சென்று வருகின்றனர். குறிப்பாக, ஏராளமான பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பேருந்துகளில் சென்று வருகின்றனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சென்னையில் இருந்து சூணாம்பேடு வழியாக புதுச்சேரிக்கு, தடம் எண் '83எ' கொண்ட எட்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.நாளடைவில், படிப்படியாக இந்த பேருந்துகள் இயக்குவது குறைக்கப்பட்டு, தற்போது நான்கு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.இதே போல, '162' தடம் எண் கொண்ட இரண்டு பேருந்துகள் மற்றும் '83பி' தடம் எண் கொண்ட பேருந்துகளும் படிப்படியாக நிறுத்தப்பட்டன.இதனால் காலை மற்றும் மாலை நேரத்தில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் பேருந்து வசதியின்றி, தனியார் பேருந்துகளில் கூட்ட நெரிசலில், படியில் தொங்கி பயணம் செய்யும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.அதிக மக்கள் போக்குவரத்து உள்ள இந்த பகுதியில், போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், பெண்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சூணாம்பேடு - தாம்பரம் இடையே மதுராந்தகம் வழியாக அரசு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ