காப்பகத்திற்கு செல்லும் பாதையில் தார் சாலை அமைக்க வலியுறுத்தல்
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பகுதி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையில், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம் அமைந்துள்ளது.வளாகத்தின் உள்ளே, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பகல் நேர காப்பகம், வட்டார வள மையம், புள்ளியல் துறை மற்றும் நீர்ப்பாசன பிரிவு அலுவலகம் ஆகியவை உள்ளன.மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பகல் நேர காப்பகத்தில், 20 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளை, மண் பாதை வழியாக அழைத்துச் சென்று, காப்பகத்தில் விட்டு வருகின்றனர்.மழைக்காலங்களில், மண் பாதை வழியாக இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, மண்ணில் சிக்கி கீழே விழுந்து அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர்.இரு சக்கர வாகனங்களில் அலுவலகத்திற்கு செல்வோர், மிகுந்த அவதி அடைகின்றனர். மேலும், அப்பகுதியில் புதர்கள் நிறைந்து, பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது.புதர்களை அகற்றவும், மண் பாதையை தார் சாலையாக அமைத்து தரவும், துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.