உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நெம்மேலியில் கடலரிப்பு தீவிரம் வீடுகளை கடல் சூழும் அபாயம்

நெம்மேலியில் கடலரிப்பு தீவிரம் வீடுகளை கடல் சூழும் அபாயம்

மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சியில், மீனவர்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் கடலரிப்பு ஏற்படவில்லை.சுனாமி தாக்குதலுக்கு பின், மற்ற இடங்களை போன்றே, இங்கும் கடலரிப்பு ஏற்பட துவங்கியது. இதற்கிடையே, கடல்நீரில் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்காக, கடலில் பாறை கற்கள் குவிக்கப்பட்டன. சூலேரிக்காடு பகுதியில், கடலரிப்பை தவிர்க்க, நேர்கல் தடுப்பும் அமைக்கப்பட்டது.அவற்றின் தாக்கத்தால், இப்பகுதியில் கடல்நீர் படிப்படியாக நிலப்பகுதியில் புகுவது அதிகரிக்கிறது. மீன்பிடி படகுகளை, வலைகளை பாதுகாப்பாக வைக்க, கடற்கரை மணற்பரப்பு இன்றி, மீனவர்கள் பல ஆண்டுகளாக பரிதவிக்கின்றனர்.சில நாட்களாக, கடலரிப்பால் நிலத்தில் கடல் புகுகிறது. இப்பகுதி கடற்கரையில் உள்ள வெங்கட்டம்மன் கோவில் பகுதியிலிருந்து, 200 மீட்டர் தொலைவிற்கு அப்பால் கடல் இருந்தது.தற்போது, அகல கடற்கரையை முற்றிலும் கடல் அழித்து, நிலத்தில் புகுந்து, இக்கோவில் கடலில் இடிந்து விழுகிறது. கடற்கரையிலிருந்து, 50 மீ., தொலைவிற்குள் வீடுகள் உள்ள நிலையில், வீடுகளை கடல் சூழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.இங்கும், 25 கோடி ரூபாய் மதிப்பில், நேர்கல் தடுப்பு, வலை பின்னல் கூடம் ஆகியவற்றுடன், மீன் இறங்குதளம் அமைக்க, கடந்த ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், பசுமை தீர்ப்பாய சிக்கல் காரணமாக, இத்திட்டம் முடங்கியுள்ளது. திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என, அப்பகுதி மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை