உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருவிடந்தையில் வரும் 10ல் சர்வதேச பலுான் திருவிழா

திருவிடந்தையில் வரும் 10ல் சர்வதேச பலுான் திருவிழா

மாமல்லபுரம்:தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், 'சர்வதேச பலுான் திருவிழா', திருவிடந்தையில் வரும் 10ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடக்கிறது.சென்னை பகுதியில், சுற்றுலா பயணியரை கவரவும், சுற்றுலாவை மேம்படுத்தவும், தமிழக சுற்றுலாத்துறை தீவிரம் காட்டுகிறது. தனியார் நிறுவனத்துடன் இணைந்து, மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் முதல்முறையாக, கடந்த 2022ல், 'சர்வதேச காற்றாடி திருவிழா' நடத்தியது.பல நாட்டு பிரமாண்ட நைலான் காற்றாடிகள் பறக்க விடப்பட்டு, பயணியரை கவர்ந்தன.இடநெருக்கடி காரணமாக, கடந்த ஆண்டு ஆகஸ்டில், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில், நித்ய கல்யாண பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான கடலோர இடத்தில், இவ்விழா நடத்தப்பட்டது. பலவகை பொருட்கள் விற்பனை அரங்கங்களும் இடம்பெற்றன. இந்நிலையில், கடந்த 2015 முதல், பொங்கல் பண்டிகையின் போது, பொள்ளாச்சியில் தனியார் நிறுவனம் நடத்தும் 'சர்வதேச பலுான் திருவிழா', தற்போது திருவிடந்தையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.திருவிடந்தையில், முன்பு ராணுவ கண்காட்சி நடத்தப்பட்ட, நித்ய கல்யாண பெருமாள் கோவில் இடத்தில், வரும் 10ம் தேதி முதல், 12ம் தேதி வரை, இவ்விழா நடத்தப்படுவதாக, சுற்றுலாத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.ஜப்பான், தாய்லாந்து, பிரான்ஸ், பிரேசில், பெல்ஜியம், வியட்நாம் உள்ளிட்ட நாட்டினர், பிரமாண்ட கண்கவர் பலுான்கள் பறக்க விடுகின்றனர். இங்கு, பொருட்கள் விற்பனை அரங்கங்களும் இடம்பெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ