அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு ரூ.8 லட்சம் இழந்த ஐ.டி., ஊழியர்
கோவிலம்பாக்கம், மேடவாக்கம் அடுத்த கோவிலம்பாக்கம், திருநகரைச் சேர்ந்தவர் வினோத் விட்டல், 35. இவருக்கு, 'ஆன்லைன்' வர்த்தகத்தில் ஈடுபட்டு, 200 மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரத்துடன், மொபைல் போனில் தகவல் வந்துள்ளது.அதை நம்பி, அந்த தகவலில் தெரிவிக்கப்பட்ட, 'வெல்த் ஆர்க் சேவிங்' எனும் குழுவில் இணைந்துள்ளார். அந்தக் குழுவின் தலைவர், 'பேராசிரியர்' என தன்னை அறிமுகப்படுத்தி, தொழில் விபரம் குறித்து தன் உதவியாளர் விளக்குவார் என கூறியுள்ளார்.பின், தங்கள் நிறுவனத்தின் பெயர், 'சாம்கோ சர்வீஸ் டிரேடிங் குரூப்ஸ்' எனவும், இதில் செய்யப்படும் முதலீட்டிற்கு, 200 மடங்கு பணம் திரும்ப கிடைக்கும் எனவும், அவரின் உதவியாளர் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.இதை உண்மையென நம்பி, கடந்த ஜன., 3ம் தேதி முதல் -27ம் தேதி வரை, ஆன்லைன் முதலீடு வாயிலாக, 2 லட்சம் ரூபாய் லாபமாக பெற்றுள்ளார்.பின், அந்த தொகையை மறுபடியும் முதலீடு செய்தபோது, 35 லட்சம் ரூபாய் இவருடைய கணக்கில் லாபமாக வந்திருப்பதாக, அந்த நிறுவனத்திடமிருந்து தகவல் வந்துள்ளது.அந்த பணத்தை பெறுவதற்கு, சேவை கட்டணமாக 6.16 லட்சம் ரூபாய் செலுத்தும்படி அந்த நிறுவனம் கூறியுள்ளது.அதன்படி, ஜன., 27ல் பணம் செலுத்தியுள்ளார். அப்போது, வரியாக 5.5 லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் என தகவல் வந்துள்ளது.இந்நிலையில், தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்தவர், 1930 என்ற உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.பின், தான் இழந்த 8.16 லட்சம் ரூபாய் பணத்தை மீட்டுத் தரும்படி, பள்ளிக்கரணை காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.