அஸ்தினாபுரம்,:தாம்பரம் மாநகராட்சி, மூன்றாவது மண்டலம், அஸ்தினாபுரம், நேதாஜி நகர் பிரதான சாலையை ஒட்டி, ஏகப்பட்ட குடியிருப்புகள் உள்ளன.குண்டும், குழியுமாக இருந்த இச்சாலையில், தார் சாலை அமைக்கும் பணி, மழைக்கு முன் துவங்கியது.நடுவில் சில மீட்டர் துாரத்திற்கு, ஒரு பாதிக்கு மட்டுமே சாலை அமைக்கப்பட்டது. பின், 50 அடி துார இடைவெளியில் பணி நடந்துள்ளது.இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதியினர், முறையாக சாலை அமைக்க வேண்டும் என, புகார் தெரிவித்தனர். இதையடுத்து, சாலை பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இந்நிலையில், சாலை போடப்பட்டதற்கான அடையாளமே தெரியாத அளவிற்கு, சமீபத்திய மழையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன.மேலும், இத்தெருவில் ஒவ்வொரு வீட்டின் முன், 2 அடி முதல் 4 அடி வரை சாலையை ஆக்கிரமித்துள்ளனர். அதனால், இத்தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுமையாகவும், முறையாகவும் சாலை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அப்பகுதி மக்கள் கூறுகையில், 'சாலையை முறையாக அமைக்காததால், புகார் தெரிவித்தோம். அதனால், மழைவிட்டு பல வாரங்கள் ஆகியும், சாலை அமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்' என்றனர்.