புதிதாக கட்டப்பட்ட அரசு அலுவலக கட்டடங்கள் திறக்கப்படாமல் பயனின்றி வீணாகும் அவலம்
மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி, 21 வார்டுகளை உடையது. இங்கு, ஒரு லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் வசித்து வருகின்றனர்.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பலரும் இங்கு வாடகைக்கு தங்கி, மறைமலை நகர் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகின்றனர்.மறைமலை நகர் நகராட்சியில், 8வது வார்டு காந்தி நகரில், சி.எம்.டி.ஏ., வாயிலாக, 5 கோடி மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டப்பட்டு, கடந்த 2022ம் ஆண்டு, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.திறப்பு விழா நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த சமுதாய கூடம் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. கடந்த ஆண்டு அமைச்சர் அன்பரசன் தலைமையில், தி.மு.க., கட்சி நிகழ்ச்சியும், பொது நிகழ்ச்சி ஒன்றும் நடத்தப்பட்டது. பயன்பாட்டிற்கு வரும் முன்னரே, நுழைவு பகுதியில் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.சமுதாய கூடம் பயன்பாட்டிற்கு வராததால், மறைமலை நகர் பகுதியை சேர்ந்த மக்கள், தங்கள் வீட்டின் சுப நிகழ்ச்சிகளை, தனியார் திருமண மண்டபங்களில் அதிக கட்டணம் கொடுத்து நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.அதே போல, 14வது வார்டு சட்டமங்கலம் பகுதியில், 15வது நிதிக் குழு தேசிய சுகாதார திட்டம் 2022- - 23ம் ஆண்டின் கீழ், 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற சுகாதார நல மையம் புதிதாக அமைக்கப்பட்டது.பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில், இன்னும் திறக்கப்படவில்லை. இரவு நேரங்களில், மதுப்பிரியர்கள் இங்கு அமர்ந்து மது அருந்துவதோடு, ஜன்னல் கண்ணாடிகளை சேதப்படுத்தி வருகின்றனர். சேதப்படுத்தப்பட்ட கண்ணாடிகள், தற்போது சீரமைக்கப்பட்டு உள்ளது.இதே வார்டில், பனங்கொட்டூர் பகுதியில் நீண்ட நாட்களாக நியாய விலைக் கடை வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. எனவே, சொந்த கட்டடம் வேண்டும் என, இப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்தனர்.அதனை ஏற்று, செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டம் 202 - 2-23ன் கீழ், 12.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய கட்டடம் கட்ட கடந்த ஆண்டு பணிகள் துவங்கப்பட்டது.நான்கு மாதங்களுக்கு முன் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், இதுவரை நியாய விலைக் கடை திறக்கப்படாமல் வாடகை கட்டடத்திலேயே செயல்பட்டு வருகின்றது.கிழக்கு பொத்தேரி பகுதியில், சேதமடைந்த அங்கன்வாடி மையம் இடித்து அகற்றப்பட்டு, 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது.தற்போது, அருகில் உள்ள வாடகை கட்டடத்தில், குழந்தைகள் இட நெருக்கடியில் பயிலும் சூழல் ஏற்பட்டு உள்ளது.எனவே, பணிகள் முடிந்தும் திறக்கப்படாமல் உள்ள அரசு கட்டடங்களை திறக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக் கடை மற்றும் நகர்ப்புற சுகாதார மையங்களை திறக்க, வேலைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில், அனைத்து கட்டடங்களும் திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.புதிய நியாய விலைக்கடை கட்டப்பட்டும், வாடகை கட்டடத்திலேயே இயங்குவதால், வீணாக வாடகை செலுத்தும் சூழல் ஏற்பட்டு உள்ளது. நகர்ப்புற சுகாதார மையம் திறக்கப்பட்டால், சுற்றியுள்ள ஐந்து கிராம மக்கள் பயன் பெறுவர்.- வி.மணிமாறன், மறைமலை நகர்.