மாமல்லை சாலை ஆக்கிரமிப்பு தடுக்க கண்காணிப்பு குழு அமைக்க முடிவு
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், சுற்றுலா மற்றும் போக்குவரத்திற்கு இடையூறான ஆக்கிரமிப்புகள், நேற்று மூன்றாம் நாளாக அதிரடியாக அகற்றப்பட்டன. மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் தடுக்க, முக்கிய துறையினருடன் கண்காணிப்புக் குழு அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.மாமல்லபுரத்தில் உள்ள பிரதான சாலைகளில், சுற்றுலா மற்றும் வாகன போக்குவரத்திற்கு இடையூறாக, ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. கடைக்காரர்கள், நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பால், கடும் நெரிசல் ஏற்பட்டு, இப்பகுதியினர், சுற்றுலா பயணியர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இப்பகுதி ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்த சப் - கலெக்டர் நாராயணசர்மா, ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அரசுத் துறையினருக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து, துணை தாசில்தார் சீனிவாசன், பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார், சுகாதார ஆய்வாளர் ரகுபதி, சாலை ஆய்வாளர் சங்கர், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் மேற்பார்வையில், கடந்த 18ம் தேதி முதல், சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.சாலையோர விளிம்பில், எல்லைக் கயிறு கட்டி, கயிற்றை தாண்டி வியாபாரம் செய்யக்கூடாது என்றும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மூன்றாம் நாளாக, நேற்று கடற்கரை சாலை பகுதியில், நடைபாதை கடை ஆக்கிரமிப்புகளை அகற்றி, எல்லைக் கயிறு கட்டி எச்சரித்தனர். கடற்கரை பாதையில், சுற்றுலா வளர்ச்சிக் கழக இடத்தில் இயங்கும் கடைகளின் முன்புற ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தினர்.அகற்ற தவறினால், தாங்களே அகற்றுவதாகவும், சேதத்திற்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும் எச்சரிக்கப்பட்டது. 25ம் தேதி வரை, பிற பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது.ஆக்கிரமிப்புகளை அகற்றியும், மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் தவிர்க்கவும், அரசுத் துறையினருடன் பிரத்யேக கண்காணிப்பு குழு அமைத்து, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.